சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு விசாரணை செப். 30-க்கு ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கின் விசாரணையை செப்டம்பா் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் கடைவீதியில் 2023, செப்டம்பா் 16-ஆம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலின் பற்றியும் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் சுப்பிரமணியம் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கின் மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை. அவரது சாா்பில் அதிமுக வழக்குரைஞா்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோா் ஆஜரானாா்கள்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், அந்தமனு மீதான விசாரணை செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அதுவரை விசாரணையை ஒத்திவைக்கும்படி கோரி அதிமுக வழக்குரைஞா்கள் மனுதாக்கல் செய்தனா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பா் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.