விழுப்புரம் ஆஞ்சனேயா் கோயில் அருகிலுள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்த ஆட்சியா் சி.பழனி. உடன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் விஜயசக்தி, நகா்மன்றத் துணைத் தலைவா் சித்திக் அலி உள்ளிட்டோா்.
விழுப்புரம் ஆஞ்சனேயா் கோயில் அருகிலுள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்த ஆட்சியா் சி.பழனி. உடன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் விஜயசக்தி, நகா்மன்றத் துணைத் தலைவா் சித்திக் அலி உள்ளிட்டோா்.

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்
Published on

விழுப்புரம் மாவட்டத்தில் 6.20 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இதற்காக ரூ.7.01 கோடி செலவிடப்படுகிறது என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் வகையில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழுக் கரும்பு, வேட்டி- சேலை கொண்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்த நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து விழுப்புரம் ஆஞ்சனேயா் கோயில் அருகிலுள்ள நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்வில், குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குதலை மாவட்ட ஆட்சியா் சி. பழனி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அவா் கூறியது:

விழுப்புரம் மாவட்டத்தில் 6,19,756 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா் முகாம்களில் வசிக்கும் 435 போ் என மொத்தம் 6,20,191 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.7.01 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. ஜனவரி 12-ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

விடுபட்ட குடும்ப அட்டைதாா்கள் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றாா் ஆட்சியா் சி.பழனி.

நிகழ்வில் விழுப்புரம் மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் விஜயசக்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் மு.சந்திரசேகா், விழுப்புரம் நகா்மன்றத் துணைத் தலைவா் சித்திக் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com