இலக்கியவாதிகளைக் கொண்டாடும் சமுதாயம்தான் நாகரிகமானது: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

இலக்கியவாதிகளைக் கொண்டாடும் சமுதாயம்தான் நாகரிகமானது என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தெரிவித்தார்.
திருக்கோவிலூரில் திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனுக்கு கபிலர் விருதும் ரூ. ஒரு லட்சத்துக்கான பொற்கிழியும் வழங்கிய தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன். உடன், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பி.டி.சிவலிங்கம், க.ஜானகிராமன் மற்றும் கழக நிறுவனர் டி.எஸ்.தியாகராசன்,  தலைவர் தே.முருகன், பொதுச் செயலர் வே.அப்பர்சுந்தரம், பொருளாளர் கா.நடராசன் உள்ளிட்டோர் .
திருக்கோவிலூரில் திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனுக்கு கபிலர் விருதும் ரூ. ஒரு லட்சத்துக்கான பொற்கிழியும் வழங்கிய தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன். உடன், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பி.டி.சிவலிங்கம், க.ஜானகிராமன் மற்றும் கழக நிறுவனர் டி.எஸ்.தியாகராசன், தலைவர் தே.முருகன், பொதுச் செயலர் வே.அப்பர்சுந்தரம், பொருளாளர் கா.நடராசன் உள்ளிட்டோர் .
Published on
Updated on
2 min read

இலக்கியவாதிகளைக் கொண்டாடும் சமுதாயம்தான் நாகரிகமானது என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்தின் 48-ஆம் ஆண்டு கபிலர் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனுக்கு கபிலர் விருதையும், டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா பொற்கிழியாக ரூ.ஒரு லட்சத்தையும் வழங்கி, அவர் மேலும் பேசியது:

திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்தின் 48-ஆம் ஆண்டு விழாவில் நான் பங்கேற்பதை பெருமையாகவும், பெரும்பேறாகவும் கருதுகிறேன். திருப்பூர் கிருஷ்ணனுக்கு இந்த விருது சற்று தாமதமாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதால் அவர் பெருமையடைகிறார். அவரால் விருது பெருமையடைகிறது.

தினமணிக்கும், கபிலர் விருதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனக்கு முன்னால் தினமணியில் ஆசிரியர்களாகப் பணியாற்றிய ஏ.என்.சிவராமன், ஐராவதம் மகாதேவன் ஆகியோருக்கு கபிலர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, அவர்கள் அமர்ந்த நாற்காலியில் அமர்ந்தவன் என்பதால், 2014-ஆம் ஆண்டில் எனக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்தால் கபிலர் விருது நிறுவப்பட்டபோது, முதன்முதலாக 1988-ஆம் ஆண்டில் அமுதசுரபி ஆசிரியரும், தலைசிறந்த இதழியலாளருமான கலைமாமணி விக்கிரமனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது அமுதசுரபி ஆசிரியரான திருப்பூர் கிருஷ்ணனுக்கு நிகழாண்டில் கபிலர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை கபிலர் விருதை பெற்றவர்களின் பட்டியலைப் பார்த்தால், தமிழகத்தின் தலைசிறந்த இலக்கியவாதிகள் யார் யார் என்கிற பட்டியலைத் தயாரித்துவிடலாம். யாரெல்லாம் தமிழுக்குத் தொண்டு செய்தார்களோ, அவர்களுக்கெல்லாம் விருது வழங்கப்பட்டிருக்கிறது. சங்கத் தமிழுக்கும், சமயத் தமிழுக்கும் தொண்டு செய்தவர்கள் பலர் விருது பெற்றவர்கள் பட்டியலில் உள்ளனர்.

இலக்கிய ரசனை இல்லாதவர்களுக்கு மொழியின் வளமை தெரியாது. பத்திரிகை ஆசிரியர்கள் மொழிக்கு வளம் சேர்க்க வேண்டும். அப்படி வளம் சேர்த்தால்தான் அந்த மொழி வளமாக நடைபோட முடியும்.

இலக்கியத்துக்கும் தனது பருவ இதழில் இடம்கொடுக்கிறார் என்கிற ஒரே காரணத்துக்காகவே அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனுக்கு இந்த விருது மட்டுமல்ல, தமிழகத்தில் வழங்கப்படும் அனைத்து விருதுகளைக் கொடுத்தாலும் தகும்.

கொண்டாட வேண்டும்:

இலக்கியவாதிகளைக் கொண்டாடும் சமுதாயம்தான் நாகரிகமானது. சங்கப் புலவர்களை மட்டுமல்ல, இலக்கியவாதிகள் அனைவரையும் கொண்டாட வேண்டும். இலக்கியவாதிகளைக் கொண்டாடாத சமுதாயம் ஒரு காலத்தும் நாகரிகமான சமுதாயமாகக் கருதப்படாது என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.

கபிலர் விருதை பெற்ற அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பேசியது: இந்த விருதை பெற்றுள்ள நான், மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பட்டிமன்றம், சொற்பொழிவு என்பதுபோல, ஏற்புரையும் இலக்கணம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். எழுத்தாளர் பாரதியின் கூற்றின்படி, இந்த விருதை, பாராட்டை பின் தேதியிட்ட காசோலைபோல நான் ஏற்கிறேன். இதற்காக என்னைத் தயார்படுத்திக் கொள்வேன்.

தினமணியில் பணியாற்றிய எனக்கு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் விருது வழங்கியிருப்பது பொருத்தமாக அமைந்திருக்கிறது. இதைவிடப் பெருமை வேறு ஒன்றும் இல்லை. இந்த விழாவுக்காக என்னையும், என் மனைவியையும் அலங்கார ஊர்தியில் அழைத்து வந்தது வாழ்வில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் பெருமை.

அரசியல்வாதிகளையும், திரைத் துறை சார்ந்தவர்களையும் கொண்டாடும் இவ்வுலகில், தமிழ் இலக்கியவாதிகளைக் கொண்டாடும் இதுபோன்ற அமைப்புகளை நாம் கொண்டாடி, போற்ற வேண்டும். தகுதியுள்ளவர்களுக்கு எல்லாம் விருதும், பாராட்டும் கிடைத்து விடாது. என்னைவிடத் தகுதியானவர்கள் பலர் உள்ள நிலையில், எனக்கு விருது கிடைத்திருப்பதை அம்பாளின் கடாட்சமாகவே கருதுகிறேன் என்றார் திருப்பூர் கிருஷ்ணன்.

அறக்கட்டளை பரிசுகள்: இதையடுத்து, பல்வேறு அறக்கட்டளைகள் சார்பில் வழங்கப்படும் பரிசுகளை வெற்றியாளர்களுக்கு நிலக்கிழார் கே.ராகவேல் வழங்கினார். சிறந்த நூலுக்கான பரிசை பாரி மகளிர் (வரலாற்றுத் திரிபுகள்) நூலுக்கும், சிறந்த நூலாசிரியருக்கான பரிசை தா.பேகத்துக்கும், சிறந்த பதிப்பகத்துக்கான பரிசை ஈரோடு பல்லவி பதிப்பகத்தின் நல்.நடராசனுக்கும் தலா ரூ.10,000 வீதம் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வழங்கினார்.

பின்னர் நடைபெற்ற வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வில், வெட்டுவானம் பி.டி.சிவலிங்கத்துக்கு திருமுறைத் திருத்தொண்டர் விருதும், திருக்கோவிலூர் க.ஜானகிராமனுக்கு கணக்கியல் கலை அறிஞர் விருதும் தினமணி ஆசிரியர் வழங்கினார்.

கபிலர் விழாவில் திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் தே.முருகன், பொதுச் செயலர் வே.அப்பர்சுந்தரம், பொருளாளர் கா.நடராசன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அலங்கார ஊர்தியில் ஊர்வலம்

பண்பு போற்றல் அரங்கத்துக்கு தலைமை வகித்து, 'திருக்குவளைத் திருத்தொண்டர்' என்ற நூலை வெளியிட்டு திருக்கோவிலூர் ஜீயர் ஸ்ரீ உ.வே.தேகளீச ராமானுஜச்சாரியார் சுவாமிகள் பேசினார். இதைத் தொடர்ந்து, திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்தின் நிறுவனர் டி.எஸ்.தியாகராசனைப் பாராட்டி, ரோட்டரி மற்றும் அரிமா சங்கத்தினர் பேசினர்.

முன்னதாக, நிறுவனர் டி.எஸ்.தியாகராசன் பெயரில் திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம் நிறுவிய அறக்கட்டளைகள் சார்பில், திருக்கோவிலூர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் கபிலர் வாகைப் பலகைகளைத் திறந்துவைத்து, மாணவ, மாணவிகளுக்கு தியாகராசன் பரிசுகளை வழங்கினார்.

மாலையில் கபிலர் குன்றின் அருகிலுள்ள கீழையூர் ஸ்ரீவீரட்டானேசுவரர் கோயில் வளாகத்திலிருந்து கபிலர் விருது பெறும் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனை அலங்கார ஊர்தியில் அழைத்து வருதல் நடைபெற்றது. இந்த ஊர்வலத்துக்கு பண்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவர்கள் கி.மூர்த்தி, சிங்கார உதியன், மணம்பூண்டி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் வே.இந்திரா முருகன் தலைமை வகித்தனர். ஊர்வலத்தை திருக்கோவிலூர் நகர்மன்றத் தலைவர் டி.என்.முருகன் தொடங்கிவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com