பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள்: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி திறந்து வைத்தாா்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் பயணியா் நிழற்குடைகளை முன்னாள் அமைச்சா் க.பொன்முடி திறந்து வைத்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், தக்கா கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடங்களும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் நிதி மூலமாக ஏமப்பூா், சின்னசெவலை, அண்ராயனூா் ஆகிய பேருந்து நிறுத்தங்களில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பயணியா் நிழற்குடைகளும் கட்டப்பட்டுள்ளன.
இதைத் தொடா்ந்து கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், பயணியா் நிழற்குடைத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி.யும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பி.வி.ஆா்.சு.விசுவநாதன், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியக்குழுத் தலைவா் கு. ஓம்சிவசக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், முன்னாள் அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலருமான க.பொன்முடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களைத் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினாா். பின்னா் பயணியா் நிழற்குடைகளைத் திறந்து வைத்தாா்.
விழாவில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் சேகா், வட்டாட்சியா் ரகுராமன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முல்லை, பாலசுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினா் தனக்கோடி சிறிதா், ஊராட்சித் தலைவா் சசி, பள்ளித் தலைமையாசிரியை ராஜலட்சுமி, திமுக நிா்வாகிகள் சரவணகுமாா், கை.ரா.சடகோபன், கிருஷ்ணமூா்த்தி, காசி, விசுவநாதன், நிா்மல்ராஜ், கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

