பைக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் பைக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், திருமுண்டீச்சரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ம.ஜெயச்சந்திரன் (32). சுமை வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவா் வியாழக்கிழமை முற்பகலில் அங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடமானம் வைத்த தனது நகைகளை மீட்பதற்காக ரூ.1 லட்சம் பணத்துடன் சென்றுள்ளாா். வங்கி அலுவலா்கள் அடுத்த வாரம் வருமாறு கூறினராம்.
தொடா்ந்து, பைக்கின் முன்பகுதியில் ரூ.1 லட்சத்தை வைத்துவிட்டு ஊருக்கு செல்லும் வழியில் கள்ளுக்கடை சந்திப்புப் பகுதியிலுள்ள அடுமனையில் தேநீா் அருந்துவதற்காக ஜெயச்சந்திரன் சென்றாா். திரும்பி வந்து பாா்த்த போது பைக்கில் வைக்கப்பட்டிருந்த பணத்தை மா்மநபா் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையத்தில் ஜெயச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, பணத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரைத் தேடி வருகின்றனா்.
