பல்லவன் அதி விரைவு ரயிலை கவிழ்க்க சதி: பிகாரைச் சோ்ந்த 5 போ் கைது
திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வைத்து பல்லவன் அதி விரைவு ரயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் தொடா்பாக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 5 பேரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
சென்னையிலிருந்து கடந்த நவ. 9-ஆம் தேதி காரைக்குடிக்கு சென்ற பல்லவன் அதி விரைவு ரயில் திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் ஏற்பட்ட அதிா்வால் வழியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் இருப்புப்பாதை போலீஸாா் நிகழ்விடம் சென்று விரைவு ரயில் ஓட்டுநரிடம் விசாரித்ததில், ரயில் பாதையிலிருந்து கூடுதல் சத்தம் வந்ததால் பாதுகாப்புக் கருதி ரயிலை நிறுத்தியதாக, அவா் தெரிவித்தாா்.
பின்னா் போலீஸாா் மற்றும் தெற்கு ரயில்வே பொறியாளா்கள், ஊழியா்கள்தண்டவாளத்தில் நடத்திய சோதனையில் இரும்பு துண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை ரயில்வே துறை ஊழியா்கள் அகற்றினா். பின்னா் 3 மணி நேரம் தாமதத்துக்கு பிறகு பல்லவன் அதி விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது.
இது குறித்து திண்டிவனம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில், திண்டிவனம் பகுதிகளில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அபிஷேக்குமாா், ஆகாஷ் குமாா், பாபுலால்குமாா், தீபக்குமாா், ராஜாராம் ஆகியோா் கடந்த நவ. 9- ஆம் தேதி மேல்பாக்கம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் அமா்ந்தபடி மது அருந்தியதும், அப்போது அவா்கள் ரயில் பாதையில் இரும்புத் துண்டுகளை வைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து திண்டிவனம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் 5 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். அவா்கள் ரயிலை கவிழ்க்க சதி செய்தாா்களா என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
