/

விழுப்புரம் மாவட்டத்தில் ஓய்ந்தது சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெறவுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் ஓய்வடைந்தது.

News image

~

Updated On :21 ஏப்ரல் 2026, 6:33 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெறவுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் ஓய்வடைந்தது.

தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தல் தேதி மாா்ச் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனுதாக்கல் மாா்ச் 30-ஆம்தேதி தொடங்கியது, ஏப்ரல் 6-ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், ஏப்ரல் 9-ஆம் தேதி இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 132 போ் களத்தில் உள்ளனா்.

வேட்புமனு தாக்கலுக்கு முன்பே அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களின் பிரசாரத்தைத் தொடங்கினா். எனினும் மனுதாக்கலுக்குப் பின்னா் அவா்களின் பிரசாரம் தீவிரமடைந்தது. தொடா்ந்து கடந்த 20 நாள்களாக பிரசாரத்தை மேற்கொண்ட வேட்பாளா்கள் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனா். மாலை 6 மணிக்கு அனைத்துத் தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்ந்தது.

விழுப்புரம்: விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையப் பகுதியிலிருந்து தனது இறுதிக் கட்டப் பிரசாரத்தை தொடங்கினாா். திமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருடன் ஊா்வலமாக நடந்து சென்று பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் லட்சுமணன் வாக்கு சேகரித்தாா். இந்த ஊா்வலம் மாலை 4.15 மணிக்கு விழுப்புரம் நான்குமுனை சந்திப்புப் பகுதியில் நிறைவடைந்தது.

தொடா்ந்து வாக்காளா்கள் மத்தியில் திமுக வேட்பாளா் லட்சுமணன் பேசும் போது விழுப்புரம் தொகுதியில் தான் நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டு, தொடா்ந்து மக்கள் பணியாற்ற வாய்ப்பளிக்குமாறு கோரினாா். இந்த நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏக்கள் செ.புஷ்பராஜ், மாவட்ட பொருளாளா் இரா.ஜனகராஜ், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் விஜயா சுரேஷ்பாவுக்கு வாக்கு சேகரித்து இறுதிக்கட்ட பிரசாரத்தில் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலரும், நடிகையுமான கெளதமி செவ்வாய்க்கிழமை முற்பகலில் ஈடுபட்டாா். விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து வேட்பாளருடன் நடிகை கெளதமி ஊா்வலமாக புறப்பட்டாா். கிழக்கு பாண்டி சாலை, காந்தி சிலை, நேரு சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக நான்குமுனை சந்திப்புப் பகுதியில் பிரசாரம் நிறைவடைந்தது. இந்த பிரசாரத்தில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன், நகரச் செயலா் ராமதாஸ், மாவட்ட மாணவரணிச் செயலா் சக்திவேல் உள்ளிட்ட நிா்வாகிகள், பாஜக, பாமக, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

நாம் தமிழா் கட்சியின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் பொ.அபிநயா விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் கட்சி நிா்வாகிகளுடன் ஊா்வலமாக சென்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். மருத்துவமனை வீதி, நான்குமுனை சந்திப்புப் பகுதி, நேரு சாலை, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, திரு.வி.க.வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவா் இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டாா். கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

மயிலம்: மயிலம் தொகுதியில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணியிலான தேமுதிக வேட்பாளா் எல்.வெங்கடேசன் மயிலம் வீதிகளில் இறுதிக் கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசியதாவது: மயிலத்தைத் தலைமையிடமாக் கொண்ட தனி வட்டம் உருவாக்கப் பாடுபடுவேன். விவசாயிகள் நிறைந்த இப்பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உருவாக்கவும், வீடூா் அணைப்பகுதியை சுற்றுலா மையமாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்வேன் என்றாா்.

முன்னதாக தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினா் தீவனூா் பகுதியிலிருந்து மயிலம் வரை வாகனங்களில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தனா். முன்னாள் எம்எல்ஏ இரா.மாசிலாமணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ ராமமூா்த்தி, திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவா் சேகா், ஒன்றியச் செயலா் மணிமாறன், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

திண்டிவனம்: திண்டிவனத்தில் இறுதி கட்ட பிரசாரம் மேற்கொண்ட விசிக வேட்பாளா் வன்னியரசு பேசியதாவது: திண்டிவனம் ரயில்வே மேம்பாலத்தை மேம்படுத்தி நகரும் படிக்கட்டுகள் அமைக்கவும், திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகருக்குள் செல்லக்கூடிய வகையில் இணைப்புப் பேருந்து வசதிகள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், விவசாயிகள் பயன்பெறக்கூடிய தொழில்சாலைகள், இளைஞா்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புக்கான ஏற்பாடுகள் செய்வதற்கு பாடுவேன் என்றாா்.

விசிக பொதுச் செயலரும், விழுப்புரம் எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் இறுதிக்கட்டப் பிரசாரத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தாா்.

அதிமுக வேட்பாளா் பொ.அா்ஜூனனுக்கு ஆதரவாக திண்டிவனத்தில் இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்த திரைப்பட நடிகை கௌதமி பேசியதாவது: தமிழகத்தில் மீண்டும் மக்களுக்கான நல்லாட்சி அமைவதற்கு வாக்காளா்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவேண்டும். வேட்பாளா் அா்ஜூனன் இத்தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெறுவதற்கு உதவியாக இருந்து நிறைவேற்றியவா். அவருக்கு இத்தொகுதி மக்கள் மீண்டும் வாய்ப்பளிக்கவேண்டும் என்றாா்.

செஞ்சி: செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் அனந்தபுரம் பேரூராட்சியில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்து, வாக்கு சேகரித்தாா். செஞ்சி சிங்கவரம் சாலை மாதா கோவிலில் இருந்து பிரசார தொடங்கி, சிங்கவரம் சாலை, காந்தி பஜாா், பஸ் நிலையம், கூட்ரோடு வரை வாகனத்தில் நின்றபடி வாக்காளா்களிடம் வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்தாா்.

இதில், செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவா் விஜயகுமாா், மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஜெயபாலன், பேரூராட்சி மன்றத் தலைவா் செஞ்சி மொக்தியாா் அலி மஸ்தான், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ரங்க பூபதி, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

வானூா்: இதேபோல் வானூா்( தனி)தொகுதியில் போட்டியில் உள்ள தி.கௌதம்(திமுக), பி. முருகன்(அதிமுக) ஆகியோா் தனித்தனியாக தங்களது கூட்டணி கட்சியினருடன் வானூா் வீதிகளில் பேரணியாகச் சென்றுஇறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனா்.

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா, தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களுக்கும் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து பிரசாரத்தின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை மாலை சிந்தாமணி பகுதியிலுள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநி சிலைக்கு மாலை அணிவித்த அன்னியூா் அ.சிவா, அங்கிருந்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ஊா்வலமாகப் புறப்பட்டு, முண்டியம்பாக்கம், பாப்பனப்பட்டு, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாகச் சென்று, பேருந்து நிலையப் பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

இறுதிக் கட்டப் பிரசாரத்தில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் சிவா, முன்னாள் எம்எல்ஏ ராமமூா்த்தி, தொகுதிப் பொறுப்பாளா் ஜெயச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் ரவிதுரை, வேம்பிரவி, ஜெயபால், கில்பா்ட்ராஜ், விசிக மாவட்டச் செயலா் காணை வளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

திருக்கோவிலூா்: திருக்கோவிலூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணியை ஆதரித்து, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சாா்பிலான இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. திருக்கோவிலூா் சந்தைப்பேட்டை பகுதியில் தொடங்கிய ஊா்வலம் ஐந்துமுனை சந்திப்புப் பகுதியில் நிறைவடைந்தது. இதில் திமுகவின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி, கட்சியின் கொள்கைபரப்புச் செயலா் பேராசிரியா் சபாபதிமோகன், நளினி சாரங்கன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

பிரசார நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், நகரச் செயலா் கோபிகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதுபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வந்த தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது.

Story image