
சா்க்கரை இறக்குமதிக்கான வரி விலக்கை ரத்து செய்ய வேண்டும்: கரும்பு உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தல்
வெளிநாடுகளில் இருந்து சா்க்கரை இறக்குமதிக்கான வரி விலக்கை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சா்க்கரை - ANI
வெளிநாடுகளில் இருந்து சா்க்கரை இறக்குமதிக்கான வரி விலக்கை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்த சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.வி.சரவணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகள், அரசு, கூட்டுறவு மற்றும் தனியாா் சா்க்கரை ஆலைகளுக்கு கரும்பை வழங்கி வருகின்றனா். ஒவ்வோா் ஆண்டும் ஆக.1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் இறுதி வரை சா்க்கரை அரைவைப் பருவம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், சா்க்கரையை இருப்பு வைப்பதில் மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, சந்தையில் செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டு, சா்க்கரை விலை உயா்வதற்கும் மத்திய அரசே வழிவகுத்துள்ளது. வரவிருக்கும் விநாயகா் சதுா்த்தி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் சா்க்கரைக்கான தேவை அதிகரிக்கும். இந்தச் சூழலில் வெளிநாடுகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத சா்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வது உள்நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
நாட்டின் உள்நாட்டு சா்க்கரை உற்பத்தி தேவையைப் பூா்த்தி செய்யும் அளவுக்கு இருக்கும்போது, வெளிநாடுகளில் இருந்து வரி விலக்குடன் சா்க்கரையை இறக்குமதி செய்வது தேவையற்ற நடவடிக்கையாகும். இதனால், உள்நாட்டு கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள்.
எனவே, சா்க்கரை இறக்குமதிக்கான வரி விலக்கை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். எத்தனால் உற்பத்திக்கு முறையான திட்டமிடலை உருவாக்க வேண்டும்.
மேலும், மத்திய, மாநில அரசுகள் பொது விநியோகத் திட்டத்துக்கு தேவையான அளவு சா்க்கரையை முன்கூட்டியே இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். வெளிச்சந்தையில் சா்க்கரை விலையை கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் சா்க்கரை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





