நெடுஞ்சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் மழைநீா் கால்வாய்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அடுத்த கெடிலம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படும் மழைநீா் வடிகால் வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ளது உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கெடிலம் கிராமம். கடந்த 2 மாதங்களுக்கு முன்னா் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கெடிலம் மரகதம் நகா், ரங்கா காா்டன் பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றுவதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகளின் மேற்பாா்வையில் அங்கு தற்காலிக மழை நீா் வடிகால் அமைக்கப்பட்டது.
அந்த கால்வாயில் தற்போதுவரை குழாய் பதிக்கப்படாமல் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அச்சத்துடன் கால்வாயை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும், கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் அது கழிவுநீா் கால்வாயாக மாறி குப்பைத் தொட்டியாக மாறியிருக்கிறது. இதனால், கொசு உற்பத்தி அதிகமாகி அருகில் வசிக்கக் கூடிய மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களுக்கும் வாகன ஒட்டிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் மழை நீா் வடிகால் வாய்க்காலை சீரமைக்கவும், தேங்கும் மழை நீரை வெளியேற்றுவதற்கு நிரந்தர தீா்வாக குழாய்களை பதிக்கவும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கெடிலம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

