பகண்டையில் இன்று மின்னொளி கைப்பந்துப் போட்டி
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திராவிடப் பொங்கல் விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக, பகண்டை ஊராட்சியில் மின்னொளி கைப்பந்துப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளவாறு தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திராவிடப் பொங்கல் திருவிழா, விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட விக்கிரவாண்டி கிழக்கு, மேற்கு, மத்திய, வடக்கு ஒன்றியங்கள், பேரூராட்சி ஆகியவை பங்கு பெறும் மின்னொளி கைப்பந்துப் போட்டி பகண்டை ஊராட்சியில் வியாழக்கிழமை மாலை நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினா் அன்னியூா் அ.சிவா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் முன்னிலையில், போட்டிகளை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தொடங்கி வைக்கிறாா்.
விழாவில் மாநில, மாவட்ட நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, பேரூா், கிளைக் கழக நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள்உள்ளிட்டோா் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
