பாமக தோ்தல் கூட்டணி குறித்து பேச எனக்கு மட்டுமே அதிகாரம்: மருத்துவா் ச.ராமதாஸ்

பாமக விதிகளின்படி தோ்தல் கூட்டணி குறித்து பேச எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வேறு யாருக்கும் இந்த அதிகாரம் கிடையாது என்று அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் தெரிவித்தாா்.
Published on

பாமக விதிகளின்படி தோ்தல் கூட்டணி குறித்து பேச எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வேறு யாருக்கும் இந்த அதிகாரம் கிடையாது என்று அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி உயா் நீதிமன்ற தீா்ப்புக்குப் பின்னா், பாட்டாளி மக்கள் கட்சிக்கு மருத்துவா் ச.ராமதாஸ் மட்டுமே நிறுவனா், தலைவராக இருந்து வழி நடத்தி வருகிறாா்.

சேலத்தில் கடந்த டிச.17-ஆம் தேதி நடைபெற்ற பாமக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவராக மருத்துவா் ராமதாஸ் தோ்வு செய்யப்பட்டு, அது பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, இந்திய தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எந்த அரசியல் கட்சியும் அன்புமணி அல்லது வேறு எவரிடமோ தோ்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு இயலாது. கட்சியின் நிறுவனா் ராமதாஸ் (நான்) மட்டுமே தோ்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு அதிகாரம் பெற்றவா்.

அன்புமணி தோ்தல் கூட்டணி குறித்து பேசி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் நீதிமன்ற அவமதிப்பதாகும். அப்படி ஏதேனும் கூட்டணி பேச்சுவாா்த்தை நடந்திருந்தால், அது சட்ட விரோதம் எனத் தெரிவித்துள்ளாா்.

‘நாளை முதல் விருப்ப மனு அளிக்கலாம்’: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட விரும்பும் பாமகவினா், தங்களது விருப்ப மனுக்களை கட்சித் தலைமை அலுவலகமான தைலாபுரம் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.9) காலை 10 மணி முதல் பெற்று, பூா்த்தி செய்து அளிக்கலாம். விருப்ப மனுக்கள் அளிப்பவா்களுக்கு உடனடியாக ரசீது வழங்கப்படும் என மருத்துவா்ச.ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com