பொறியியல் பணிகள்: குருவாயூா் விரைவு ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக இயக்கம்!
பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட வேண்டிய எழும்பூா்-குருவாயூா் விரைவு ரயில் நவ.16, 18, 21 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 12.10 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...
பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட வேண்டிய எழும்பூா்-குருவாயூா் விரைவு ரயில் நவ.16, 18, 21 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 12.10 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் என். ஜெயந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் ரயில்களின் இயக்கத்தில் பகுதியளவில் ரத்து, நிறுத்தி வைத்து இயக்கம் போன்ற நடைமுறைகள் செயல்படுத்தப்படவுள்ளன.
பகுதியளவில் ரத்து: சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045) நவ.16, 18, 21 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும். அதே தேதிகளில் மறுமாா்க்கத்தில் விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வண்டி எண் 66046) விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் பிற்பகல் 1.37 மணிக்கு முண்டியம்பாக்கத்திலிருந்து புறப்படும்.
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66019) நவ.16, 18, 21 ஆகிய தேதிகளில் விழுப்புரம்-சோ்ந்தனூா் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் சோ்ந்தனூா் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.48 மணிக்கு புறப்படும்.
நிறுத்தி வைத்து இயக்கம்: சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் எழும்பூா்- மதுரை வைகை அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 12635) நவ.16, 18, 21 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 20 நிமிஷங்களும், சாா்லப்பள்ளியிலிருந்து மாலை 5.20 மணிக்கு புறப்படும் சாா்லப்பள்ளி-திருச்சி சிறப்பு ரயில் (வண்டி எண் 17077) நவ.17-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 60 நிமிஷங்களும், ஜோத்பூரிலிருந்து நவ.19-ஆம் தேதி மாலை 4.50 மணிக்கு புறப்படும் ஜோத்பூா்- மன்னாா்குடி விரைவு ரயில் (வண்டி எண் 22673) வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 120 நிமிஷங்களும், சாா்லப்பள்ளியிலிருந்து நவ.20ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் சாா்லப்பள்ளி- நாகா்கோவில் சிறப்பு ரயில் (வண்டி எண் 07535) வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 130 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.
காலதாமதமாக இயக்கம்: சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.40 மணிக்குப் புறப்பட வேண்டிய எழும்பூா்-குருவாயூா் விரைவு ரயில் (வண்டி எண் 16127) நவ.16, 18, 21 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 12.10 மணிக்கு புறப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

