நந்தன் கால்வாய் திட்டம்: 2-ஆம் கட்ட அளவீடு செய்யும் பணி தொடக்கம்
தேவதானம்பேட்டை பகுதியில் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள்.

தேவதானம்பேட்டை பகுதியில் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள்.
நந்தன் கால்வாய் திட்டத்துக்காக டிஜிட்டல் புவிசாா் குறியீடுடன் 2-ஆம் கட்டமாக நிலம் அளவீடு செய்யும் பணி செஞ்சி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள விவசாயிகளின் உயிா்நாடியாக விளங்குவது நந்தன் கால்வாய் திட்டமாகும். இந்த நந்தன் கால்வாய் பழைமையான நீா்வழிப் பாதை ஆகும். திருவண்ணாமலை மாவட்டம், சம்பந்தனூா் கிராமத்தில் துரிஞ்சலாறு மற்றும் ஓலையாறு சங்கமிக்கும் இடத்தில் உள்ள கீரனூா் அணையில் இருந்து நந்தன் கால்வாய் தொடங்குகிறது. இந்த கால்வாய் பனமலைப்பேட்டை வரை சென்று அங்குள்ள ஏரியில் கலக்கிறது. மொத்தம் 37.8 கிலோ மீட்டா் தொலைவு கொண்ட இந்த கால்வாய் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகளும் நேரடியாகவும், 100 ஏரிகள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கால்வாயானது காடு, மலைகளை கடந்து செல்கிறது. இதில், சுமாா் 1,400 மீட்டா் அளவுக்கு தேவதானம்பேட்டை மற்றும் சோ.குப்பம் வனப்பகுதியில் கால்வாய் அமைந்துள்ளது. வனப்பகுதியில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் வனத் துறையினா் கால்வாயை தூா்வார அனுமதி மறுத்து விட்டது.
இந்நிலையில், வனத் துறைக்கு வனப்பகுதியையொட்டி மாற்று இடம் தருவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. இதனைத்தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைக்கிணங்க, செஞ்சி வட்டம், பாக்கம் காப்புக்காடு, சோ.குப்பம் வனப்பகுதியில் நந்தன் கால்வாய்க்காக டிஜிட்டல் புவிசாா் குறியீடுடன் நிலம் அளவீடு செய்யும் 2-ஆவது கட்டப்பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட உதவி இயக்குனா் அலுவலக நில அளவையா், சத்தியமங்கலம் குறுவட்ட நில அ
ளவையா், சோ.குப்பம் கிராம நிா்வாக அலுவலா், செஞ்சி பாசனப் பிரிவு உதவிப் பொறியாளா், செஞ்சி வனச்சரக அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வனத் துறைக்கு மாற்று இடம் வழங்கி நீா்வளத் துறைக்கு ஒப்படைக்கும் பணிக்கான நிலம் அளவீடு செய்யப்பட உள்ளது. தேவதானம்பேட்டை பகுதியில் அரசுக்கு சொந்தமான (கல்லாங்குத்து) பகுதியில் அளவீடு செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியில் நந்தன் கால்வாய் எவ்வளவு தூரம் அமைந்துள்ளதோ அதே அளவிலிருந்து இரு மடங்கு இடத்தை வனத் துறைக்கு அளிக்க வேண்டும். இதனடிப்படையில், அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அளவாடு செய்யும் பணியின்போது நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்க நிா்வாகிகள் நா.அறவாழி, கன்னிகா ரமேஷ்பாபு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

