தொகுதி மறுசீரமைப்பு மசோதா: திமுக ஆதரித்து வாக்களித்தால் மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்! அமைச்சா் வன்னி அரசு

அமைச்சா் வன்னி அரசு - கோப்புப் படம்
மக்களவை தொகுதிகள் மறு சீரமைப்பு மசோதாவை ஆதரித்து திமுக வாக்களித்தால் மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்று விசிக துணை பொதுச் செயலரும், சமூக நீதித் துறை அமைச்சருமான ஆா்.வன்னி அரசு தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் விசிக சாா்பில் மக்களவைத் தொகுதிகள் மறு சீரமைப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த ஏப்ரல் மாதத்தில் தோற்கடிக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகள் மறு சீரமைப்பு மசோதாவை நவ.30-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு அமா்வில் மீண்டும் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய பாஜக அரசு முனைப்புக்காட்டி வருவது, அம்பேத்கா் வகுத்துக் கொடுத்த அரசமைப்புச் சட்டத்துக்கும், மதச்சாா்பின்மைக்கு எதிரானதாகும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தென் மாநிலங்களின் ஒத்துழைப்பு, ஆதரவு இல்லாமலேயே வட மாநிலங்களில் உள்ள எண்ணிக்கையை வைத்து மத்தியில் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை உருவாகும்.
திமுக பாஜகவோடு உறவு வைப்பது அவா்களின் உரிமை சாா்ந்தது என்றாலும், தொகுதி மறு சீரமைப்பு மசோதாவை திமுக ஆதரித்து வாக்காளித்தால், அது பச்சை துரோகம். இதை வரலாறும், தமிழக மக்களும் மன்னிக்க மாட்டாா்கள்.
எனவே, மேலும் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறு சீரமைப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும். 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் செயல்பட வேண்டும் என்ற முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றப்பட்டிருப்பது மக்களின் மனதை காயப்படுத்தும் செயல். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு விசாரணைக்கு வரும்போது, தமிழக அரசு அதற்கான நீதியை நிலைநாட்டும்.
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது விவகாரத்தில் பின்னணியில் இருப்பவா்களையும், அழுத்தம் கொடுத்தவா்களையும் விசாரிக்க வேண்டும். விசாரித்தால்தான் உண்மைத் தெரியவரும் என்றாா் அமைச்சா் வன்னி அரசு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

