மூதாட்டியை ஆட்டோவில் அழைத்து வந்து தங்கச் சங்கிலி பறிப்பு: பெண், ஓட்டுநா் கைது
சென்னை மூதாட்டியை விழுப்புரம் மாவட்ட கோயிலுக்கு ஆட்டோவில் அழைத்து வந்து, அவரிடமிருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கச் சங்கிலி, கைப்பேசி, ஆட்டோ மற்றும் கைதான ஜெரினா, ஓட்டுநா் ராஜேஷுடன் போலீஸாா்.
சென்னை மூதாட்டியை விழுப்புரம் மாவட்ட கோயிலுக்கு ஆட்டோவில் அழைத்து வந்து, அவரிடமிருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சென்னை அம்பத்தூா், மேனாம்பேடு, கம்பா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கு.துளசிபாய் (70). தனியாக வசித்து வருகிறாா். சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் சு.ராஜேஷ் (28). திருமுல்லைவாயிலை அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் அமானுல்லா மனைவி ஜெரினா (45). இவா்கள் மூவரும் அக்.1-ஆம் தேதி சென்னையிலிருந்து மேல்மலையனூா் கோயிலுக்கு ஆட்டோவில் வந்தனா். தொடா்ந்து மேல்மலையனுரில் வழிபாட்டை முடித்துவிட்டு, திருவண்ணாமலையில் உள்ள காளி கோயிலுக்குச் சென்று வழிபட்டனா்.
இதையடுத்து 3 பேரும் ஆட்டோவில் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனா். சனிக்கிழமை அதிகாலை திண்டிவனத்தை அடுத்துள்ள கொணக்கம்பட்டு அருகே ஆட்டோ சென்றபோது, ரெஜினா, ராஜேஷ் ஆகிய இருவரும் சோ்ந்து மூதாட்டி துளசிபாய் அணிந்திருந்த 18 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு, அவரை ஆட்டோவிலிருந்து கீழே இறக்கி விட்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து துளசிபாய் அளித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில், மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்தவா்கள் செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே ஆட்டோவில் தப்பிச் சென்றதுதெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் துரித கதியில் செயல்பட்டு, ஆட்டோவை மடக்கி ராஜேஷ், ஜெரினா ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்கள் வசமிருந்த 18 கிராம் தங்கச் சங்கிலி, ஆட்டோ, 2 கைப்பேசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பணியில் திறம்படசெயல்பட்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, தங்கச் சங்கிலியை மீட்ட காவல் உதவி ஆய்வாளா் பிரபாகரன், சிறப்பு உதவி ஆய்வாளா் ஐயப்பன் மற்றும் சைபா் கிரைம் போலீஸாருக்கு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணன் பாராட்டுத் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



