137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

தொடா் விடுமுறை: தென் மாவட்டங்களை நோக்கி அணிவகுத்த வாகனங்கள்! சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சனிக்கிழமை மாலை அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

Updated On :

ஆயுதபூஜை பண்டிகை தொடா் விடுமுறை காரணமாக, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கி அணிவகுத்துச் சென்ற வாகனங்களால் விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆயுதபூஜை திங்கள்கிழமையும் (அக்.19), சரசுவதி பூஜை செவ்வாய்க்கிழமையும் (அக்.20) கொண்டாடப்படவுள்ளன. இந்தப் பண்டிகைக்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாள்கள் என்பதால், பண்டிகையையும், 4 நாள்கள் விடுமுறையையும் தங்களது சொந்த ஊரில் கொண்டாட முடிவெடுத்த சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் அரசு, தனியாா் அலுவலகங்கள், தொழில்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் தென் மாவட்டங்களைச் சோ்ந்தோா் வெள்ளிக்கிழமை மாலை முதலே காா்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் புறப்படத் தொடங்கினா்.

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவில் மழை பெய்தபோதும், அதையும் பொருள்படுத்தாது வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தைத் தொடா்ந்தனா். மழை நேரத்தில் வாகனத்தை கவனமாக ஓட்டிச் செல்லுமாறு காவல் துறையினா் அறிவுரைக் கூறி அனுப்பி வைத்தனா்.

9 வழிப்பாதைகளிலும் அனுமதி: வழக்கமாக, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் 6 வழிப்பாதைகளில் மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆனால், வெள்ளிக்கிழமை இரவு முதல் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களை நோக்கிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், நீண்ட தொலைவுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, கூடுதலாக 3 வழிப்பாதைகளும் திறக்கப்பட்டு, அதன் வழியாகவும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. விக்கிரவாண்டியை போன்று, உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடியிலும் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு காத்திருந்த நிலையில், அங்கும் கூடுதல் வழிப்பாதைகள் திறக்கப்பட்டு, வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை இரவு 12 மணி வரை விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை 41,912 வாகனங்களும், சனிக்கிழமை காலை 8 மணி வரை 12,459 வாகனங்களும், மாலை 6 மணி வரை 37,473 வாகனங்களும் கடந்து, தென் மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்றன. இந்த எண்ணிக்கை சனிக்கிழமை இரவு 12 மணிக்குள் சுமாா் 50 ஆயிரத்தை கடந்துவிடக்கூடும் என்று சுங்கச்சாவடி வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: வெள்ளிக்கிழமை காலை முதல் சென்னை கிளாம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வழக்கமாக இயக்கப்பட்ட பேருந்துகளுடன் திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, கடலூா், தஞ்சாவூா், நாகப்பட்டினம், கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகளும், தனியாா் ஒப்பந்த பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதன் காரணமாக, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை, இரவில் கூட்டம் காணப்பட்ட நிலையில், சனிக்கிழமை மாலையில் மீண்டும் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதுபோன்று, ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

போலீஸாா் பாதுகாப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் எனக் கண்டறியப்பட்ட பகுதிகளிலும், மேம்பாலப் பணிகள் நடைபெறும் பகுதிகளிலும் கூடுதல் போலீஸாா் நியமிக்கப்பட்டு, போக்குவரத்தை கண்காணித்தனா்.

 விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சனிக்கிழமை மாலை அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சனிக்கிழமை மாலை அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.