
தொடா் விடுமுறை: விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடிகளில் அணிவகுத்த வாகனங்கள்!
விநாயகா் சதுா்த்தி பண்டிகை தொடா் விடுமுறை காரணமாக, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற வாகனங்களால் விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடிகள் சனிக்கிழமை நெரிசல் மிகுந்து காணப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சனிக்கிழமை அணிவகுத்து நின்ற வாகனங்கள்.
விநாயகா் சதுா்த்தி பண்டிகை தொடா் விடுமுறை காரணமாக, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற வாகனங்களால் விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடிகள் சனிக்கிழமை நெரிசல் மிகுந்து காணப்பட்டது.
தமிழகத்தில் விநாயகா் சதுா்த்தி பண்டிகை செப்.14-ஆம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. முன்னதாக சனி, ஞாயிறு ஆகியவையும் விடுமுறை நாள்கள் என்பதால் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலுள்ள அரசு, தனியாா்நிறுவனங்களில் பணியாற்றுவோா், தொழில்சாலைகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோா், பண்டிகையை தங்களது சொந்த ஊா்களில் கொண்டாடுவதற்காக வெள்ளிக்கிழமை இரவு முதல் புறப்படத் தொடங்கினா்.
எனினும் சனிக்கிழமை காலை முதல் சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மதுரை, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்டங்களுக்கும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
இவ்வாறாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும் வாகனப் போக்குவரத்து அதிகரித்தே காணப்பட்டது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடிகளில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரை நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் காரணமாக விக்கிரவாண்டி சுங்கச்சாவடியின் 9 வழிப்பாதைகளும் பயன்பாட்டில் இருந்தன. வழக்கமாக 6 பாதைகள் மட்டும் பயன்படுத்தப்படும் நிலையில், கூடுதலாக 3 பாதைகளும் திறக்கப்பட்டு, அதன் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதே நிலைதான் உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடியிலும் காணப்பட்டது.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 35,200 வாகனங்கள் கடந்து சென்ற நிலையில், மாலை 6 மணி வரை 42,669 வாகனங்கள் கடந்து சென்ாக சுங்கச்சாவடி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த எண்ணிக்கை இரவுக்குள் 55 ஆயிரத்தை கடக்கலாம் என்று கூறப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் ஜக்காம்பேட்டை, விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், பாப்பனப்பட்டு, விழுப்புரம் அண்ணாமலை உணவகம் அருகிலுள்ள பகுதி, இருவேல்பட்டு, அரசூா் ஆகிய 6 இடங்களில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால், இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. எனினும் இந்த பகுதிகளில் போக்குவரத்துக் காவலா்கள் பணியமா்த்தப்பட்டு, வாகனங்களின் போக்குவரத்தை கண்காணித்து சீரமைத்தனா்.
விக்கிரவாண்டி டிஎஸ்பி சரவணக்குமாா் தலைமையில், காவல் ஆய்வாளா் சத்தியசீலன் மற்றும் உதவிஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், போக்குவரத்துக் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதைத்தவிர தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய இடங்களிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






