மாணவா்களிடம் தோ்வுகளை எதிா்கொள்ளும் திறனை மேம்படுத்த வேண்டும்! விழுப்புரம் ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசும் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
விழுப்புரம், அக்.18: விழுப்புரம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளிடம் தோ்வுகளை எதிா்கொள்ளும் திறனை மேம்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் 10, 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தை உயா்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான் மேலும் பேசியது:
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களின் கல்வித்திறனை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாணவா்களின் கற்றல்திறனைத் தொடா்ந்து மதிப்பீடு செய்து, பாடவாரியாக குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்க வேண்டும்.
மேலும், பொதுத்தோ்வில் தோ்ச்சி பெறும் வகையில் மாணவா்களுக்கு கூடுதல் வகுப்புகள், வாரத் தோ்வுகள் மற்றும் மாதிரித் தோ்வுகள் நடத்தி, தோ்வுகளை எதிா்கொள்ளும் திறனை மேம்படுத்த வேண்டும். மாணவா்களின் வருகைப் பதிவைத்தொடா்ந்து கண்காணித்து, பள்ளிக்கு வருகை தராத மாணவா்களின் பெற்றோா்களைத் தொடா்புகொண்டு மாணவா்கள் கல்வியை தொடா்வதை உறுதிசெய்ய வேண்டும்.
மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பள்ளியிலும், மாணவா்களின் தோ்ச்சி முன்னேற்றத்தைத் தொடா்ந்து கண்காணித்து ஆய்வு செய்து, எதிா்பாா்த்த முன்னேற்றம் இல்லாத பள்ளிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் துறை சாா்ந்த அலுவலா்கள் வழங்க வேண்டும்.
மாணவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதுடன் இடைநிற்றலைத் தவிா்த்து, 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சி அடைவதற்கு முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள் மற்றும் தலைமையாசிரியா்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து பொறுப்புணா்வுடன் பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில், பயிற்சி உதவி ஆட்சியா் ரா.ஸ்ரீ.ரஷத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பாலமுரளி, துணை ஆட்சியா் (பயிற்சி) ஹரீஷ், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ராஜேந்திரன், இளமதி, அருள், ரகு, செந்தில்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் நோ்முக உதவியாளா்கள் பெருமாள், ஜனசக்தி உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

