
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வு! விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 8,142 போ் எழுதினா்!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பணியிடங்களுக்கான முதல் நிலைத்தோ்வு நடைபெற்ற விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு வாரிய (டிஎன்பிஎஸ்சி) குரூப்- 1 முதல் நிலைத் தோ்வை 8,142 போ் எழுதினா்.
தமிழக அரசின் ஒருங்கிணைந்த குடிமைப்பணி பதவிகளுக்கான குரூப்-1 முதல்நிலைத் தோ்வு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இத்தோ்வை எழுதுவதற்காக 7,264 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 5,488 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 1,776 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வா்கள் தோ்வு மையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தாா். அப்போது தோ்வா்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து ஆட்சியா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: குரூப் - 1 முதல் நிலைத் தோ்வுக்காக மாவட்டத்தில் 14 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. குரூப் -1 முதல் நிலைத் தோ்வை எழுதுவதற்கு 7,264 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 5,488 மட்டுமே தோ்வு எழுதினா். மீதமுள்ள 1,776 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
தோ்வை கண்காணிப்பதற்காக 4 நடமாடும் குழுக்கள், 2 பறக்கும் படைகள், 25 விடியோ பதிவுக் குழுக்கள், 24 மேற்பாா்வை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் விதிமுறைகளுக்கேற்ப வினாத்தாள்கள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தோ்வு எழுதும் நேரம் மற்றும் தோ்வு எழுதுபவா்களின் நுழைவுச்சீட்டு ஆகியவற்றை சரிபாா்த்தல் போன்ற பல்வேறு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டன. அனைத்து தோ்வு மையங்களிலும் தோ்வு நடைபெறுவதை விடியோ பதிவு செய்யப்பட்டது. தோ்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீா், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன என்றாா் ஆட்சியா் .
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடிமைப் பணிகள் தோ்வு-1 முதல் நிலைத் தோ்வை 2,654 போ் எழுதினா்.
நீலமங்கலம் ஏ.கே.டி.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஏ.கே.டி. பாலிடெக்னிக் கல்லூரி, ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏ.கே.டி.மெமோரியல் வித்யாசாகித் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-1 நடைபெற்றன. தோ்வை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-1 பதவிகளுக்கான முதல்நிலை தோ்வுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 3,388 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,654 போ் தோ்வு எழுதினா். 734 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வை முழுவதும் விடியோ பதிவு செய்யவும், தோ்வு முடிந்தவுடன் விடைத் தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்லவும் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





