தரம் உயர்த்தப்படாத அரசு மருத்துவமனை
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பொது மருத்துவமனை இயங்கி வருகிறது.


தரம் உயர்த்தப்படாத அரசு மருத்துவமனை
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பின் இச் சாலையில் போக்குவரத்து அதிகரித்து, விபத்துகளும் நாளுக்கு நாள் நிகழ்ந்து வருகிறது. விபத்துகளில் சிக்குபவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக் கூடம், உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள், போதுமான மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால், விபத்துகளில் சிக்கி பலத்த காயமடைந்தவர்கள், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழக்கும் அவலநிலை உள்ளது. எனவே ஸ்ரீபெரும்புதூர் அரசுப் பொது மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையிலேயே உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலைக்கு தேவை மேம்பாலம்
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போதெல்லாம், ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் செல்கிறது. இதனால் மழைக் காலங்களில் இச் சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், சோமங்கலம், நடுவீரப்பட்டு, அமரம்பேடு, பூந்தண்டலம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதி மக்கள் இச் சாலையைப் பயன்படுத்தித்தான் குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளுக்குச் சென்றுவர வேண்டியுள்ளது. எனவே மழைக் காலங்களில் வெளியேறும் உபரி நீர் செல்ல ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து நிறைவேற்றப்படாமல் உள்ளது.
குன்றத்தூர் - படப்பைக்கு பேருந்து வசதி தேவை
ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உள்பட்ட குன்றத்தூர் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் படப்பை பகுதியில் உள்ளது. இந் நிலையில் அய்யப்பன்தாங்கல் பகுதியில் இருந்து குன்றத்தூர், சோமங்கலம், சேத்துப்பட்டு, புஷ்பகிரி, படப்பை வழியாக ஒரத்தூர் பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் சாலை சரியில்லை என்று நிறுத்தப்பட்டது.
இதனால் குன்றத்தூர், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் படப்பை பகுதியில் இயங்கி வரும் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்குச் செல்ல, தாம்பரம் சென்று அங்கிருந்து படப்பைக்கு வரவேண்டியுள்ளது. இதனால் அரசின் நலத் திட்டங்களைப் பெற மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கை 20 ஆண்டுகளாக கிடப்பிலேயே உள்ளது.
இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படுமா?
இத்தொகுதிக்கு உள்பட்ட ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம், திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் சிப்காட், தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், இத்தொகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. எனவே இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப் படாமலேயே நிலுவையில் உள்ளது.
அரசு கல்லூரி வேண்டும்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 100-க்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இத் தொகுதியில் அரசு ஐடிஐ, பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகள் இல்லை.
தனியார் பொறியியல் கல்லூரிகள் இப்பகுதியில் அதிகம் இயங்கி வருகின்றன.
எனவே ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அரசுத் தொழில்நுட்ப கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை இப்பகுதி மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. அதே போல் அரசு கலை, அறிவியல் கல்லூரியும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...