இன்னும் தீரல... நிறைவேறாத கோரிக்கைகள்... காத்திருக்கும் மக்கள்

பொன்னேரி: பொன்னேரி சட்டப் பேரவைத் தொகுதியில்,  பழவேற்காடு பேருந்து நிலையம், நேரடி நெல் கொள்முதல் நிலையம், பொன்னேரி,
இன்னும் தீரல... நிறைவேறாத கோரிக்கைகள்... காத்திருக்கும் மக்கள்
Updated on
1 min read

பொன்னேரி தொகுதி...

பொன்னேரி: பொன்னேரி சட்டப் பேரவைத் தொகுதியில்,  பழவேற்காடு பேருந்து நிலையம், நேரடி நெல் கொள்முதல் நிலையம், பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி தொகுதியில்  தற்போதைய   எம்எல்ஏ பொன்.ராஜா (அதிமுக) பல்வேறு திட்டங்களை தொகுதிக்குக் கொண்டுவந்துள்ள போதிலும், இன்னமும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் உள்ளதாக தொகுதி மக்கள் கூறுகின்றனர்.

இத்தொகுதியில் நிறைவேற்றப்படாமல் உள்ள கோரிக்கைகள் குறித்து சமூகநல ஆர்வலர்கள் கூறியது:

 சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் ஆறுவழிப்பாதை பணியை விரைவில் முடிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பொன்னேரி செல்லும் சாலையை நான்கு வழிப்பாதையாக மாற்ற வேண்டும். பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, அப்பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.

 பழவேற்காடு பகுதியில் வசிக்கும் 30,000-க்கும் மேற்பட்ட மீனவ மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பேருந்து நிலையம் இதுவரை அமையவில்லை. ஏரியும், கடலும் இணையும் முகத்துவாரத்தில் ஏற்பட்டுள்ள மண்திட்டு அகற்றப்பட வேண்டும்.  பொன்னேரி, சின்ன வேண்பாக்கம் பகுதியிலுள்ள ஆளில்லா ரயில்வே கேட்டில் ஊழியரை நியமிக்க வேண்டும். ஆலாடு ரயில்வே கேட்டை கடந்துசெல்ல சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரர் கோயிலின் இரண்டாவது பிரகார சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும். அகத்தீஸ்வரர்  அக்னித் தீர்த்தக் குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். திருவாயர்பாடியில் உள்ள ஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.  பொன்னேரி- பழவேற்காடு சாலையிலுள்ள திருவாயர்பாடியில் ரயில்வே பாலத்தின் கீழ் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சுரங்கப்பாலம் தாழ்வாக அமைந்துள்ளது. இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். ஆரணி ஆற்றின் குறுக்கே மனோபுரம் பகுதியில் தரைப்பாலம் அமைக்க வேண்டும்.

 பொன்னேரியில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். பொன்னேரியில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பணிமனையை அமைக்க வேண்டும்.

 ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், மகளிர் காவல் நிலையம், மதுவிலக்கு காவல் நிலையம், பொன்னேரி காவல் நிலையம் ஆகியவற்றுக்கு  ஒருங்கிணைந்த  கட்டடம் அமைக்க வேண்டும்.

 பொன்னேரி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் நிலையம் இல்லை. பொன்னேரி ரயில் நிலையத்தில் கும்மிடிப்பூண்டி, நெல்லூர், சூளூர்பேட்டை செல்லும்  மின்சார ரயில்கள் முதல் நடைமேடையில் நின்று செல்வதில்லை. இங்குள்ள   நடை மேம்பாலத்துக்கு மேற்கூரை இல்லை.

 இந்தக் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளன. வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்தக் கோரிக்கைகளை கவனத்தில் கொள்வார்களா?   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com