
தொகுதி அலசல்: முதல் தொகுதியில் முடிசூடுபவர் யார்?
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் எண்ணிக்கையில் முதலாவதாக உள்ள கும்மிடிப்பூண்டி தொகுதி, வடக்கே புதுவாயல்

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் எண்ணிக்கையில் முதலாவதாக உள்ள கும்மிடிப்பூண்டி தொகுதி, வடக்கே புதுவாயல் தொடங்கி, தெற்கே ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் வரையிலும், கிழக்கே பழவேற்காடு எல்லையை ஒட்டிய குழிநாவல் முதல், தெற்கே ஆந்திர எல்லை ஊத்துக்கோட்டை வரையிலும், வடகிழக்கில் பூண்டி ஒன்றியம்- பென்னாலூர் பேட்டை வரையிலும் அடங்கியுள்ளது.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள், எல்லாபுரம் ஒன்றியத்தில் 43 ஊராட்சிகள், பூண்டி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள் என 131 ஊராட்சிகளும், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய இரு நகராட்சிகளும் இதில் உள்ளன. 2,60,876 பேர் வாக்களிக்க உள்ளனர். இத்தொகுதியில் 30 சதவீதம் வன்னியர்களும், 24 சதவீதம் தலித் இன மக்களும் வசிக்கின்றனர்.
இதுவரை வென்றவர்கள்:
1967-இல் இருந்து நடைபெற்ற பேரவைத் தேர்தல்களைக் காண்கையில், கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுகவின் கோட்டை என்றே கூறலாம்.
இங்கு அதிமுக-வைச் சேர்ந்த ஆர்.எஸ்.முனிரத்தினம் 3 முறையும், ஆர்.சக்குபாய், கே.சுதர்சனம், கே.எஸ்.விஜயகுமார் ஆகியோர் தலா ஒரு முறையும், 2005-இல் அப்போதைய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சுதர்சனம் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு நடைபெற்ற இடைத் தேர்தலில் அவரது மகன் கே.எஸ்.விஜயகுமாரும், 2012 தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் சி.எச்.சேகரும் வெற்றி பெற்றுள்ளனர்.
திமுகவில் கே.ஏ.வேழவேந்தன் இரு முறையும், கி.வேணு இரு முறையும் வெற்றி பெற்றுள்ளார்கள்.
களத்தில் உள்ள வேட்பாளர்கள்:
நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக சார்பாக கே.எஸ்.விஜயகுமார், திமுக கூட்டணி சார்பாக மக்கள் தேமுதிகவைச் சேர்ந்த தற்போதைய எம்எல்ஏ சி.எச்.சேகர், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மா.செல்வராஜ், தேமுதிக சார்பாக கே.கீதா, பாஜக சார்பாக எம்.பாஸ்கரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேலும், நாம் தமிழர் கட்சி சார்பாக சுரேஷ்குமார், இந்து மக்கள் கட்சி சார்பாக ச.அருள்வேல் செல்வன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக எம்.சமரன், இளைஞர் மற்றும் மாணவர் கட்சி சார்பாக ஆர்.கந்தவேல், கோகுல மக்கள் கட்சி சார்பாக வி.சி.கந்தராஜ், சுயேச்சைகளாக ஏ.கருணாகரன், ஆர்.கணபதி, எம்.முருகன், ஏ.பாண்டியன், டி.சரவணன் என 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
எனினும், அதிமுக, மதேமுதிக (திமுக கூட்டணி), பாமக, தேமுதிக ஆகிய 4 கட்சிகளிடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.
வேட்பாளர்களின் பலமும் பலவீனமும்:
கே.எஸ்.விஜயகுமார் (அதிமுக)- இங்கு அதிமுக வேட்பாளருக்கு தொண்டர்கள் பெரும் பலமாக இருக்க, இன்னொரு புறம் கே.எஸ்.விஜயகுமாரின் தந்தை கே.சுதர்சனம் எம்எல்ஏ, அமைச்சராக இருந்த போது செய்த பணிகளால் மக்களிடையே நிலவும் அபிமானமும் பலமாக உள்ளது.
கும்மிடிப்பூண்டி தொகுதியில் 43 ஊராட்சிகளை உள்ளடக்கிய எல்லாபுரம் ஒன்றியத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அதிமுகவை மிகவும் வலிமையாக மாற்றியுள்ள மாவட்ட ஊராட்சித் தலைவர் பி.ரவிசந்திரன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமாரின் மாமா என்பது பக்கபலம்.
2006-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை எம்எல்ஏவாக இருந்த கே.எஸ்.விஜயகுமார் கடந்த 5 ஆண்டுகளாக கட்சியினரிடம் நெருக்கமாக இல்லாததே பலவீனம். இருப்பினும் அதை கடந்த ஒரு மாதத்தில் ஓரளவு மாற்றிவிட்டார்.
சி.எச்.சேகர் (மதேமுதிக): திமுக கூட்டணியில் மதேமுதிக வேட்பாளராகப் போட்டியிடும் சி.எச்.சேகர், கடந்த முறை அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வென்றவர். அதிமுக-வின் தேர்தல் பிரசார உத்திகள் இவருக்கு அத்துப்படி என்பது இவருக்கு பலம்.
கடந்த 5 ஆண்டுகளில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏவும் திமுக மாவட்டச் செயலாளருமான கி.வேணு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஜெ.கோவிந்தராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தொகுதியில் திமுகவை பலமாக வைத்திருப்பதும் இவருக்கு பலம்.
பொறியியல் பட்டதாரி, இளைஞர், சமூக வலைதளங்களில் இளைஞர்களின் அபிமானத்தைப் பெற்றவர் என்பது இவரது பக்கபலம். கடந்த 5 ஆண்டுகளில் எதிர்கட்சி எம்எல்ஏவாக இருந்த காரணத்தால், இவர் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என்பது பலவீனம்.
கும்மிடிப்பூண்டியில் திமுக போட்டியிடும் என அக்கட்சியினர் எதிர்பார்த்த நேரத்தில், கடைசி நேரத்தில் மதேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதில் திமுக-வினர் பெரும்பான்மையானோர் அதிருப்தியில் இருந்தனர். அவர்களை கூடுமானவரை சி.எச்.சேகர் சரிக்கட்டியிருக்கிறார்.
மா.செல்வராஜ் (பாமக): பாமக சார்பில் போட்டியிடும் மா.செல்வராஜ் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர், கும்மிடிப்பூண்டியில் சுமார் 85,000 வன்னியர் இன ஓட்டுகள் உள்ளன. இதுவே இவரது பெரிய பலம். பாமக முத்திரையே பிற சமூகத்து ஓட்டுகளைப் பெற தடையாக இருப்பது பலவீனம்.
கே.கீதா (தேமுதிக): தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமாகா ஆகிய கட்சிகளின் சார்பில் கே.கீதா போட்டியிடுவது பலம். கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி முழுக்கப் பரவியுள்ளதும் அவர்களது களப்பணியும், தமாகா, விடுதலை சிறுத்தைகள் பரவலாக இருப்பதும் இவருக்கு பலம். தொகுதிக்குப் புதியவர், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது ஆகியவை இவருக்கு பலவீனம்.
வெல்லப் போவது யார்?
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் அதிமுக தொண்டர்களின் உற்சாகமான ஒத்துழைப்போடு அனைத்துப் பகுதிகளிலும் பிரசாரம் செய்து வருகிறார். ஆளுங்கட்சி பலமும், அமைதியானவர் என்ற பெயரும் இவருக்கு துணை நிற்கிறது.
திமுக கூட்டணியில் மதேமுதிக வேட்பாளர் சி.எச்.சேகர் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 10 கோடி மதிப்பில் தொகுதிக்குச் செய்துள்ள பணிகளை வரிசைப்படுத்தி பிரசாரம் செய்துவருகிறார். ஆரம்பத்தில் சுணக்கம் காட்டினாலும், பிறகு வரிந்து கட்டிக்கொண்டு திமுகவினர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
பாமக சார்பில் போட்டியிடும் மா.செல்வராஜ் வன்னியர் என்பதால் பிற சமூகத்து வாக்குகளைப் பெற வீடு வீடாக இறங்கி முக்கிய பிரமுகர்களை சந்தித்து பிரசாரம் செய்வதால், தேர்தல் பந்தயத்தில் இவரை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். தேமுதிக வேட்பாளர் கே.கீதா 6 கட்சி கூட்டணி தன்னைக் கரை சேர்க்கும் என நம்பி வருகிறார்.
இந்த நான்கு முனைப் போட்டியில் ஜெயிக்கப் போவது யார் என்ற கேள்வி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. குழப்பத்துக்குப் பிறகே தெளிவு பிறக்கும். முதல் தொகுதியில் வெல்லப்போவது யார் என்பது தெரியும் வரை குழப்பம் நீடிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




