முகப்பு
சென்னை

முழு அடைப்புப் போராட்டம்: அலைக்கழித்த திமுகவினர்; மல்லுக்கட்டிய போலீஸார்

தடையை மீறி பேரணி நடத்தியதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்தனர்.

Updated On : 6 ஏப்ரல் 2018, 4:21 am IST
பகிர்:

தடையை மீறி பேரணி நடத்தியதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்தனர். அவருடன் மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சார்பில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணாசிலை நான்கு முனை சந்திப்பில் திமுக உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் காலை 8.30 மணி முதல் கூடத் துவங்கினர். அதைத் தொடர்ந்து போலீஸாரும் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர்.இந்த நிலையில் திமுகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவ வாகனம் ஒன்று அங்கு வந்தது. அதைப் போராட்டத்தில் பங்கேற்றோர் அனுமதிக்கவில்லை. அதன் பின், போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அந்த வாகனத்தைச் செல்ல அனுமதித்து மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணியளவில் வந்தார். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்கபாலு, பீட்டர்அல்போன்ஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் எம்.எல்.ஏ., மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்பட பல்வேறு தலைவர்களுடன் மு.க.ஸ்டாலினும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.
அப்போது, போலீஸார் ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மறியல் போராட்டத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டனர். அதை, ஸ்டாலின் ஏற்காமல் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டாலினைச் சூழ்ந்து இருந்தனர்.
திடீர் பேரணி: இந்நிலையில் திடீரென 9.50 மணியளவில் எழுந்த மு.க.ஸ்டாலின் வாலாஜா சாலை வழியாக கடற்கரை நோக்கி கையில் கருப்புக் கொடியை ஏந்தியவாறு பேரணியாகச் செல்லத் தொடங்கினார். தலைவர்களும் உடன் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பேரணியைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் சிரமத்துக்குள்ளாகினர். 
தடுப்பு அரண்கள் மீறல்: திருவல்லிக்கேணி காவல்நிலையம் அருகில் தடுப்பு அரண்கள் அமைத்து, பேரணியைக் காவல்துறை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தடுப்பு அரண்களைத் தகர்த்து, போராட்டக்காரர்கள் சென்றனர். அதன் பிறகு, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தடுப்பு அரண்களை அமைத்ததுடன், காவல்துறையின் வாகனங்களையும் நிறுத்தி பேரணியைத் தடுத்தனர். இதனால், போலீஸாருக்கும் பேரணியில் பங்கேற்றோருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் லேசாக தடியடியும் நடத்தினர். ஆனாலும், தடுப்பு அரண்களை உடைந்தெறிந்து பேரணி கடந்து சென்றது.
தடைகளை மீறி... அதைத் தொடர்ந்து, காமராஜர் சாலை அருகே எழிலகம் அருகேயும் தடுப்பு அரண்கள் அமைத்து பேரணியைத் தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், அது எடுபடவில்லை. தடைகளை மீறி 10.10 மணியளவில் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே மு.க.ஸ்டாலின் தலைமையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமைச் செயலகத்துக்குச் செல்லக்கூடிய சாலை என்பதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் நின்றன.
ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது: அதைத் தொடர்ந்து ஸ்டாலினிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மறியல் போராட்டத்தைக் கைவிடுமாறு கூறினர். ஆனால், அவர் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால், காவல்துறையினர் அவரை குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்தனர். அதைத் தொடர்ந்து மற்ற தலைவர்களையும் கைது செய்யப்பட்டனர். மாலை 3.30 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சுதர்சனம், தாயகம்கவி, ரங்கநாதன், கு.க.செல்வம் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்பட 4 ஆயிரத்தும் மேற்பட்டோர் கைதாகி விடுவிக்கப்பட்டனர்.
கைது மண்டபத்தில் திருமணம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பாரதிதாசன்-
ஸ்ரீமதி திருமணம் வியாழக்கிழமை நடைபெற இருந்தது. கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நடத்தி வைப்பதாக இருந்தது. ஆனால், மறியல் போராட்டத்தில் பங்கேற்றதால்அத்திருமணத்துக்கு அவரால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பெரம்பூரில் தங்க வைக்கப்பட்டிருந்த மண்டபத்துக்கு அவர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுக்க திருமணம் நடைபெற்றது. திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக் கூறினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments