கிழக்கு கடற்கரைச் சாலையில் பைக் ரேஸ்: இளைஞர் சாவு
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி இளைஞர் இறந்தார்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி இளைஞர் இறந்தார்.
சென்னையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் காவல்துறையின் தீவிர கண்காணிப்பையும் மீறி இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு, விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு திருவான்மியூரில் இருந்து கானாத்தூர் வரை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நால்வர் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள், கானாத்தூரில் இருந்து திருவான்மியூருக்கு பந்தயத்தில் ஈடுபட்டனர். ஈஞ்சம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி சாலைத் தடுப்பின் மீது மோதியது.
அதனை ஓட்டி வந்த கொடுங்கையூர் யூனியன் கார்பைடு நகர் 3-வது தெருவைச் சேர்ந்த நா.நிதிஷ்குமார் (19) சம்பவ இடத்திலேயே இறந்தார். மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து வந்த கொடுங்கையூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்த தினேஷ் (18) பலத்த காயமடைந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அப் பகுதி மக்கள் மீட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.