முகப்பு
சென்னை

சென்னையில் 70 அரிய வகை வன உயிரினங்கள் மீட்பு: வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டவை

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டு, சென்னையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 70 அரிய வகை வன

Updated On : 9 அக்டோபர் 2018, 4:24 am IST
வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட அணில் குரங்கு, அரிய வகை கிளிகள்.
பகிர்:


வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டு, சென்னையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 70 அரிய வகை வன உயிரினங்களை வருவாய்ப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை மீட்டனர்.
வருவாய்ப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் மிúஸாரம் மாநில தலைநகர் அய்சால், கொல்கத்தா, கௌகாத்தி ஆகிய இடங்களில் அண்மையில் திடீர் சோதனை நடத்தினர். இச்சோதனையில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை கிளிகள், குரங்கு, ஓணான், பச்சோந்தி உள்ளிட்ட வன உயிரினங்களை மீட்டனர். மொத்தம் 35 பறவையினங்கள், ஒரு வங்க பூனை உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.
இந்த வனவிலங்குகள் மியான்மர் நாட்டின் எல்லை வழியாக இந்தியாவுக்குள் கடத்திக் கொண்டு வரப்பட்டிருப்பதும், இந்த கடத்தலின் முக்கிய நபர்கள் மும்பை, சென்னை ஆகிய இடங்களில் தங்களது பண்ணைகளில் அரியவகை வன உயிரினங்களை விற்பனைக்காக வைத்திருப்பதும் தெரியவந்தது.
இத்தகவலின் அடிப்படையில் சென்னையிலும், சென்னை புறநகர் பகுதியிலும் இந்த கும்பலைச் சேர்ந்தவர்களின் இரு பண்ணைகளில் வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் திங்கள்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் பஞ்ச வர்ணக் கிளி, நீல மஞ்சள் பஞ்சவர்ணக் கிளி, கொண்டைக் கிளி உள்ளிட்ட கிளி வகைகள், அணில் குரங்கு, சிவப்பு பேராந்தி போன்ற விலகினங்கள் என மொத்தம் 70 அரிய வகை வன உயிரினங்கள் மீட்கப்பட்டன.
இதுதொடர்பாக இக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபரையும் அதிகாரிகள் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், இந்த வன உயிரினங்கள் தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய பகுதிகளில் இருந்து கடத்தி மியான்மருக்கு கொண்டு வரப்பட்டிருப்பதும், அங்கிருந்து தரைமார்க்கமாக மிúஸாரம் மாநிலத்துக்குள் கடத்தி வரப்பட்டு, நாட்டின் பிற பகுதிகளுக்கு கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் இந்தக் கும்பல் பல்வேறு வன உயிரினங்களைக் கடத்தி விற்பதும் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக, சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய மேலும் சிலரை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.