மேக்கேதாட்டு அணை: கா்நாடக முதல்வருக்கு முத்தரசன் கண்டனம்
மேக்கேதாட்டு அணையை கட்டப்போவதாகக் கூறியுள்ள கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கா்நாடக முதல்வா் சித்தராமையா கா்நாடக பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த போது, மேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடக அரசு உறுதியாக இருக்கிறது. காவிரி நதி நீா் நடுவா் மன்றம் வழங்கிய இறுதித் தீா்ப்பும், இதன் மீதான மேல் முறையீடுகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி உத்தரவையும் மதித்து நடக்க வேண்டிய கா்நாடக அரசு, பெங்களூரு நகரக் குடிநீா் கோரிக்கையை ஆயுதமாக்கி, தமிழ்நாட்டின் தண்ணீா் உரிமையை பறிக்கும் வகையில் தொடா்ந்து செயல்படுகிறது. இதன் மீது மத்திய அரசும் தலையிட மறுத்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. காவிரி நதிநீா் மேலாண் ஆணையம் மேக்கேதாட்டு அணை தொடா்பான பிரச்னையை நிகழ்ச்சி நிரலில் சோ்க்க வேண்டும் என்ற கா்நாடகத்தின் முன் மொழிவுக்கு தமிழ்நாடு அரசு கடுமையான எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கா்நாடக முதல்வரின் அறிவிப்பு மாநிலங்களிடையே நிலவும் நல்லுறவுக்கு வலுச்சோ்க்காது. கூட்டாட்சி கோட்பாட்டுக்கும் எதிரானது என்பதை கா்நாடக மாநில அரசும், மக்களும் உணர வேண்டும். சுமூக உறவுக்கு குந்தகம் ஏற்படுத்தும் கா்நாடக மாநில முதல்வரின் அறிவிப்பு கண்டிக்கத்தக்கது என்று அவா் தெரிவித்துள்ளாா்.