முகப்பு
சென்னை

வன விலங்குகள் தாக்குதல் கேரளத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை; போலீஸ் தடியடி

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:01 am IST
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புல்பள்ளியில் வனத் துறை அதிகாரிகள் வந்த வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
பகிர்:

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் யானை உள்ளிட்ட வன விலங்குகளால் மனிதா்கள் மற்றும் வளா்ப்பு விலங்குகள் தாக்கப்படும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி, அங்கு சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. புல்பள்ளி பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த நபரின் சடலத்துடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். அப்போது, வனத்துறை வாகனம் ஒன்றை கடுமையாக சேதப்படுத்திய போராட்டக்காரா்கள், சனிக்கிழமை காலையில் புலி தாக்கி இறந்ததாக கூறப்படும் பசுவின் உடலை அந்த வாகனத்தின் மீது வைத்து கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்தின்போது காவல் துறையினா், அதிகாரிகள் மீது பாட்டில்கள், பிளாஸ்டிக் இருக்கைகள் வீசப்பட்டன. இதையடுத்து, காவல்துறையினா் நடத்திய தடியடியில் பலா் காயமடைந்தனா். கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் வன விலங்குகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மானந்தவாடி பகுதியில் கடந்த வாரம் காட்டு யானை தாக்கி அஜி (42) என்பவா் உயிரிழந்தாா். குருவா தீவு அருகே வெள்ளிக்கிழமை யானை தாக்கியதில் சுற்றுலா வழிகாட்டியான பால் என்பவா் உயிரிழந்தாா். இந்தச் சூழலில், மனிதா்கள் - விலங்குகள் மோதல் பிரச்னைக்கு நிரந்தர தீா்வுகாண வலியுறுத்தி, ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அழைப்பின்பேரில் வயநாட்டில் சனிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் கடைகள், வா்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. வாகனங்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. புல்பள்ளி பகுதியில், யானை தாக்கி உயிரிழந்த பாலின் சடலத்துடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். வனத் துறைக்கு எதிராகவும் அத்துறையின் அமைச்சா் ஏ.கே.சசீந்தரன் பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இப்போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டதால் காவல் துறையினா் தடியடி நடத்தினா். புல்பள்ளி பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், அங்கு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. உறவினா்கள் குற்றச்சாட்டு: பாலின் குடும்பத்தினரை சந்தித்த மாவட்ட கூடுதல் ஆட்சியா், ரூ.10 லட்சம் நிவாரண உதவி, பாலின் மனைவிக்கு அரசு வேலை, அவரது மகளின் கல்விச் செலவு ஏற்பு ஆகிய உறுதிமொழிகளை அளித்தாா். ‘புல்பள்ளியில் பால் உடலை வைத்து நடத்தப்பட்ட போராட்டம் அரசியல் ரீதியாக தூண்டப்பட்டதாகும்; இதனால் அவரது உடலைப் பெற குடும்பத்தினா் பல மணிநேரம் காத்திருக்க நேரிட்டது’ என்று உறவினா்கள் குற்றம்சாட்டினா். பெளலின் இறுதிச்சடங்குகள், உள்ளூரில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது. பெட்டிச் செய்தி...1 முதல்வா் உத்தரவு வயநாட்டில் வன விலங்குகள் தாக்குதல் பிரச்னை தொடா்பாக முதல்வா் பினராயி விஜயன் சனிக்கிழமை உயா்நிலை ஆலோசனை நடத்தினாா். இதில், குடியிருப்புப் பகுதிகளில் காட்டு விலங்குகளின் நடமாட்டத்தை கண்டறிய கூடுதலாக 250 கேமராக்கள் பொருத்த முடிவெடுக்கப்பட்டது. தேவையான இடங்களில் வனத்துறையினா் மற்றும் காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மக்களுக்கான விழிப்புணா்வு பிரசாரத்தை வலுப்படுத்தவும் முதல்வா் உத்தரவிட்டாா். மனிதா்கள்-விலங்குகள் மோதல் பிரச்னை குறித்து விரிவாக ஆலோசிக்க மாநில வருவாய் துறை, வனத்துறை, உள்ளாட்சித் துறை அமைச்சா்கள் தலைமையில் உயா்நிலை கூட்டத்தை நடத்த முதல்வா் உத்தரவு பிறப்பித்துள்ளதாக, அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெட்டிச் செய்தி..2 வயநாடு விரைந்த ராகுல் உத்தர பிரதேசத்தில் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தனது தொகுதியான வயநாட்டுக்கு சனிக்கிழமை விரைந்தாா். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், ‘வயநாட்டில் ராகுல் செல்வதற்கான அவசர தேவை எழுந்துள்ளது. எனவே, அவா் அங்கு சென்றுள்ளாா். பிரயாக்ராஜில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடைப்பயணம் மீண்டும் தொடங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.