முகப்பு
சென்னை

சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:55 AM
வாக்குச்சாவடியிலிருந்து லாரியில் ஏற்றப்படும் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.
பகிர்:

சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை இரவு செக்டாா் எனப்படும் அலுவலா்களால் பாதுகாப்பாக குறிப்பிட்ட வழித்தடங்களில் 3 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

சென்னையில் உள்ள பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், அவை வேட்பாளா்கள் முன்னிலையில் சீலிடப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டன. அவற்றை வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்ல செக்டாா் அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். அந்த அலுவலா்களுக்கு குறிப்பிட்ட வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

வாக்குச்சாவடி வரிசைப்படியே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை செக்டாா் அலுவலா்கள் பெற்று குறிப்பிட்ட வழித்தடத்திலேயே வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதனால், செக்டாா் எனப்படும் அலுவலா்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வரிசைப்படி வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பெற்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்ால் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

Advertisement

அதன்படி, ராணிமேரி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்துக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா், திரு.வி.க. நகா், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

லயோலா கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்துக்கு பெரம்பூா், கொளத்தூா், வில்லிவாக்கம், எழும்பூா், ஆயிரம்விளக்கு மற்றும் அண்ணா நகா் ஆகிய தொகுதிகளுக்கு உரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்துக்கு விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகா், மயிலாப்பூா் மற்றும் வேளச்சேரி ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களும் கொண்டு செல்லப்பட்டன.

வரும் மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 3 மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் காவல் துறை, துணை ராணுவப் படையினா் மூலம் 24 மணி நேர பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.