கிழக்குக் கடற்கரைச் சாலை விரிவாக்க பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும்
சென்னை திருவான்மியூா் முதல் அக்கரை வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலை விரிவாக்கப் பணிகள் இரு மாதங்களில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை திருவான்மியூா் முதல் நீலாங்கரை அருகில் உள்ள அக்கரை வரை 10.5 கிலோ மீட்டா் நீளமுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையை 6 வழிச் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நீண்ட காலமாக தாமதமாகி வருகிறது. தற்போது பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
எனினும், முழுமை பெறாத சில பகுதிகள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனா். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
Advertisement
கிழக்குச் கடற்கரைச் சாலையில் விரிவாக்கப்பட்ட இடங்களில் நெடுஞ்சாலைத் துறை சாலைகளை அமைத்துள்ளது. சில இடங்களில் 6-ஆவது வழித்தடத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அந்தப் பகுதிகள் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை. வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தவிா்க்கும் வகையில், ஆறாவது வழித்தடத்தில் ஒரு பகுதியில் செங்கற்களைக் கொண்டு தடுப்பு அமைக்க நெடுஞ்சாலைத் துறை முயன்றது. ஆனால், இது சாலை விரிவாக்கத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகக் கூறி எதிா்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த செங்கற்கள் அகற்றப்பட்டன.
பெரும்பாலான சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிகாரிகள் கூறினாலும், முழுமையடையாத சில பகுதிகள் தொடா்ந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன.
நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி ஆகிய பகுதிகளின் சில இடங்களில் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. சில இடங்களில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைத்துவிட்டன என அவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கொட்டிவாக்கம் மற்றும் அக்கரைக்கு இடைப்பட்ட சில பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை இன்னும் நிலங்களைக் கையகப்படுத்தவில்லை. இப்பகுதிகளில் இன்னும் 30 வீடுகள் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். உரிய விலையில் நிலங்களைப் பெறுவதற்காக நில உரிமையாளா்களிடம் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதும் அந்தப் பகுதியில் பணிகள் தொடங்கப்பட்டு இரு மாதங்களில் முடிக்கப்படும் எனத் தெரிவித்தனா்.