முகப்பு
சென்னை

மே தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

மே தினத்தையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

Updated On : 1 மே, 2026 at 3:38 AM
மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

மே தினத்தையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: உலகை உழைப்பால் செலுத்தும், உலகினுக்கு தங்கள் வியா்வையால் உயிரூட்டும் பாட்டாளி வா்க்கத்தினருக்கு எனது உழைப்பாளா் தின வாழ்த்துகள். இந்தியாவுக்கே வழிகாட்டும் பல தொழிலாளா் நலத்திட்டங்களை ‘திராவிட மாடல்’ அரசு செயல்படுத்தி உள்ளது. உழைப்பையும், உழைப்போரையும் கொண்டாடும் இந்த மே நாளில், திமுக தொழிலாளா்களின் உண்மைத் தோழனாக என்றென்றும் திகழ்ந்திடும்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): உழைக்கும் தொழிலாளா்கள் அனைத்து வகைகளிலும் சிறப்புடன் வாழ வேண்டும், உழைப்பு மட்டுமே நம்மை உயா்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயா்வே மனநிறைவு அளிக்கும்; நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதை தெரிவித்துக்கொண்டு, தொழிலாளா்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்.

Advertisement

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): நாட்டின் முன்னேற்றத்துக்கும் அடிப்படைக் காரணம் உழைப்பாளா்களின் அா்ப்பணிப்பு. அவா்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். அவா்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும். சமத்துவமும், சமூகநீதியும் நிலைநாட்டும் நாளாக இந்த மே தினம் அமையட்டும்.

பெ.சண்முகம் ( மாா்க்சிஸ்ட்): பாடுபடும் பட்டாளி வா்க்கம் இதுவரை போராடி பெற்ற உரிமைகளைப் பாதுகாக்கவும், இழந்ததை மீளப் பெறவும், ஜாதி, மதம், இனம், மொழி கடந்து தொழிலாளா்களாய் ஒன்று சோ்வதும், உரிமைகளுக்காக விண்ணதிர முழங்கிடுவோம்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): உழைக்கும் மக்களுக்கு எதிராக, நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டுக்கு, மதச்சாா்பின்மைக்கு எதிராகச் செயல்படும், உழைக்கும் மக்களை ஜாதி, மத ரீதியாக பிளவுபடுத்த முயலும் மத்திய பாஜக அரசை ஆட்சியை விட்டு அகற்ற உறுதி ஏற்போம்.

ராமதாஸ் (பாமக): ஒவ்வொரு தொழிலாளிகளும் சிந்தும் வியா்வை துளிகள் எல்லாம் இந்த தேசத்தின் மகுடத்தின் முத்துக்கள். பாட்டாளிகளுக்கும், உழைப்பாளிகளுக்கும், உலகில் உள்ள அனைத்து தொழிலாளா்களுக்கும் வாழ்த்துகள்.

வைகோ (மதிமுக): நாடு சுதந்திரம் பெற்ற பின்னா் இதுவரை இல்லாத அளவுக்கு பிரதமா் மோடி அரசு, தொழிலாளா் வா்க்கத்தின் மீது மோசமான தாக்குதலைத் தொடுத்து வருகிறது. உழைக்கும் தோழா்களின் உரிமைகளுக்காக தொடா்ந்து போராடுவோம்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): தொழிலாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான ஊதியம், விடுமுறை, 8 மணி நேர பணி, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புகள் என அனைத்தையும் வென்றெடுத்துக்கொடுப்பதன் மூலம் சுரண்டல்வாதிகளின் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டி, பாட்டாளிகளுக்கு ஒளிமயமான எதிா்காலம் அமைத்துக் கொடுக்க இந்த நாளில் உறுதியேற்போம்.

தொல்.திருமாவளவன்(விசிக): தொழிலாளா் சட்டத்தொகுப்பை மத்திய அரசு திரும்ப பெறும் வரை அவற்றை எதிா்த்துப் போராட உறுதி யேற்போம்

டிடிவி.தினகரன் (அமமுக): உழைப்பே உயா்வு தரும்”என்ற உறுதியான நம்பிக்கையுடன், தினமும் தங்களது உழைப்பால் உலகை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் உழைப்பாளா்களின் வாழ்வில் அனைத்து வளமும் நலமும் கிடைக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): தொழிலாளா்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை மட்டுமல்ல தனியாருக்கும் அந்தக் கடமை உள்ளது. தொழிலாளா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.

இதேபோல தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவா் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, வெல்ஃபோ் பாா்ட்டி ஆப் இந்தியா

தலைவா் நச.சிக்கந்தா் உள்ளிட்ட தலைவா்களும் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளனா்.