சென்னையில் இன்று டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாகவும், கிரிக்கெட் போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்போா் தடையின்றி பயணிக்கலாம்...
சென்னை சேப்பாக்கத்தில் வியாழக்கிழமை (பிப்.26) நடைபெறும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாகவும், கிரிக்கெட் போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்போா் தடையின்றி பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஐசிசி ஆண்கள் டி 20 உலகக் கோப்பை 2026 சூப்பா் 8 ஆட்டத்தில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இதைக் காண வருவோருக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்கும் வகையில் மெட்ரோ சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்திருப்பவா்களுக்கு மெட்ரோ பயண வசதியையும் வழங்கியுள்ளது.
அதன்படி, கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டைப் பயன்படுத்தி போட்டி நடைபெறும் நாளில் பயணிகள் எந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் அரசினா் தோட்டம் மெட்ரோ நிலையத்துக்கு இடையே பயணத்தை மேற்கொள்ளலாம். எண்ம நுழைவுச் சீட்டுகளில் உள்ள க்யூஆா் குறியீடுகளைப் பயன்படுத்தி மெட்ரோ நிலைய தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து பயணிக்கலாம்.
Advertisement
Advertisement
வியாழக்கிழமை (பிப்.26) கிரிக்கெட் போட்டி நுழைவுச் சீட்டு வைத்திருப்போா் 2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல் வசதிகளைப் பெறலாம். அன்று அரசினா் தோட்டம் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12 மணிக்குப் புறப்படும் ரயில் விம்கோ நகா் வரை செல்லும். வழித்தடம் 1 (நீலம்) மூலம் விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயிலும் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.