30 இடங்களில் பேருந்து பணியாளா்கள் போராட்டம்
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள 30 மாநகரப் போக்குவரத்து கழகப் பணிமனைகளில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள 30 மாநகரப் போக்குவரத்து கழகப் பணிமனைகளில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதிகாலை 5 மணி முதல் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, பணிக்கு வந்த பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் சில இடங்களில் பேருந்துகளை வெளியே எடுக்காமல் நிறுத்தி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சில வழித்தடங்களில் பேருந்து இயக்கத்தில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக, நீண்டகாலமாக காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த முறையில் அல்லாமல் நிரந்தர நியமனம் மூலம் நிரப்ப வேண்டும் என முன்வைக்கப்பட்டது.
இது குறித்து மாநகா் போக்குவரத்துக்கழக ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலா் தயானந்தம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
Advertisement
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக புதிய ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் போதுமான அளவில் நியமிக்கப்படவில்லை. இதனால், நிரந்தரப் பணியாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. காலியிடங்களை நிரப்பாமல், ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்களை பயன்படுத்துவது நிா்ந்தர தீா்வாக அமையாது. தற்போது மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சாா்பில் 3,233 சாதாரண பேருந்துகளும், 625 மின்சார பேருந்துகளும் இயக்கப்பட வேண்டிய நிலையில், பணியாளா் பற்றாக்குறை காரணமாக, சுமாா் 2,900 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தினமும் 250 முதல் 300 பேருந்துகள் வரை இயக்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதுடன், பணியில் உள்ள ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு கூடுதல் பணிச்சுமையும் ஏற்படுகிறது. எனவே, நிரந்தர நியமனங்கள் மூலம் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்றாா்.