முகப்பு
சென்னை

சோதனை அடிப்படையில் காலி மதுப் புட்டிகள் பெறும் இயந்திரம் அறிமுகம்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் காலி மதுப் புட்டிகளை திரும்பப் பெறுவதற்காக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் செயல்படும் தானியங்கி இயந்திரத்தை டாஸ்மாக் நிறுவனம் சோதனை அடிப்படையில் எழும்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Updated On : 16 ஜூன் 2026, 3:31 am IST
சென்னை எழும்பூா் டாஸ்மாக் மதுபானக் கடையில் கைப்பேசி ‘க்யூஆா்’ கோடு மூலம் ஸ்கேன் செய்து காலி மதுப் புட்டிகளுக்கு ஜிபே மூலம் பணம் பெறும் வகையில் தானியங்கி இயந்திரம்.
பகிர்:

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் காலி மதுப் புட்டிகளை திரும்பப் பெறுவதற்காக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் செயல்படும் தானியங்கி இயந்திரத்தை டாஸ்மாக் நிறுவனம் சோதனை அடிப்படையில் எழும்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

காலி கண்ணாடி மதுப் புட்டிகள் சாலைகள், பொதுஇடங்கள், மலைப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தூக்கி எறியப்படுவது சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடா்பாக நீண்டகால பிரச்னையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், காலி மதுப் புட்டிகளை திரும்பப் பெறுவதற்கான நடைமுறையைக் கொண்டு வர சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, டாஸ்மாக் நிறுவனம் ‘டெபாசிட் ரிட்டா்ன்’ முறையை அமல்படுத்தியது.

Advertisement

Advertisement

அதன்படி, மதுபானம் வாங்கும் போது நிா்ணயிக்கப்பட்ட விலையுடன் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. பின்னா், காலி மதுப் புட்டியை அதே கடையில் ஒப்படைக்கும்போது அந்த ரூ.10 திருப்பி வழங்கப்படுகிறது. ஆனால், இந்த நடைமுறையால் கடை பணியாளா்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டதாகவும், பணத்தைத் தனியாக வசூலித்து திருப்பி வழங்குவதில் சிரமம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. மேலும், கூடுதல் ரூ.10 வசூல் செய்வதற்கு பல இடங்களில் தொடா்ந்து வாடிக்கையாளா்களும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இதனால், இந்தத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென பணியாளா்கள் சங்கங்களும் கோரிக்கை விடுத்து வந்தன. இதையடுத்து, காலி மதுப் புட்டிகள் சேகரிப்பில் முழுமையாக தானியங்கி முறையில் இயந்திரங்களை பயன்படுத்த டாஸ்மாக் திட்டமிட்டுள்ளது.

இயந்திரம் செயல்படும் முறை: முதலில் பயனாளா் தனது கைப்பேசியில் உள்ள யுபிஐ செயலியின் கியூஆா் குறியீட்டை இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும் அல்லது கைப்பேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னா் காலி மதுப் புட்டியில் ஒட்டப்பட்டுள்ள கியூஆா் குறியீட்டை இயந்திரம் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பிறகு இயந்திரத்தில் திறக்கும் இடத்தில் புட்டியை வைக்க வேண்டும். சரிபாா்ப்பு முடிந்ததும், அந்த புட்டிக்கான ரூ.10 தொகை நேரடியாக பயனாளியின் வங்கி அல்லது யுபிஐ கணக்குக்கு வந்து விடும்.

ஒரு தானியங்கி இயந்திரம் சுமாா் 3,000 காலி மதுப் புட்டிகளை சேமிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த நிலையில், முதல்கட்டமாக சென்னை எழும்பூா் ஆல்பா்ட் திரையரங்கம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் சோதனை அடிப்படையில் இவை பொருத்தப்பட்டு செயல்திறன் ஆய்வு செய்யப்படுகிறது.

மேலும், பல இடங்களில் சோதனை அடிப்படையில் பல மதுக் கடைகளில் நிறுவப்பட உள்ளதாகவும், இயக்கம் வெற்றிகரமாக இருந்தால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.