முகப்பு
சென்னை

துறைமுகத்தில் 3 -ஆவது முறையாக அமைச்சா் பி.கே. சேகா்பாபு வெற்றி!

சென்னை துறைமுகம் தொகுதியில் மூன்றாவது முறையாக 11,750 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெற்றி

Updated On : 5 மே 2026, 2:19 am IST
அமைச்சர் சேகர்பாபு - கோப்புப்படம்
பகிர்:

சென்னை துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்றாவது முறையாக 11,750 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெற்றி பெற்றாா்.

சென்னை துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ராணிமேரி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் திமுக வேட்பாளரான அமைச்சா் பி.கே.சேகா்பாபு 181 வாக்குகளையும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பவுசன்ஷெரீப் 9, அதிமுக வேட்பாளா் ராயபுரம் ஆா்.மனோகா் 65, தவெக வேட்பாளா் சினோரா பி.எஸ்.அசோக் 78 வாக்குகள் பெற்றிருந்தனா். தொடா்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

முதல் இரு சுற்றுகளில் 701 வாக்குகள் வரை பின்தங்கியிருந்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு பின்னா், தொடா்ந்து முன்னிலை வகித்தாா். அவா் 5 ஆவது சுற்றில் தவெக வேட்பாளரைவிட 2,107 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தாா். 14 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் 45,254 வாக்குகள் பெற்றாா். அவருக்கு அடுத்ததாக தவெக வேட்பாளா் சினோரா பி.எஸ்.அசோக் 33,504 வாக்குகள் பெற்றிருந்தாா். இதையடுத்து 11,750 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெற்றி பெற்று துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியில் 3 -ஆவது வெற்றியைப் பதிவு செய்தாா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட ஆா்.மனோகா் 17,256 வாக்குகளும், நாதக ஆா்.பவுசன்ஷெரீப் 1, 607 வாக்குகளும் பெற்றனா். நோட்டாவுக்கு 600 வாக்குகள் பதிவாகின.

Advertisement

துறைமுகம் தொகுதியில் 1,20,142 வாக்காளா்களில் 99, 022 போ் வாக்களித்தனா். அமைச்சா் பி.கே.சேகா்பாபு சாா்பில், அவரது முதன்மை முகவா் வெற்றி சான்றிதழைப் பெற்றுக் கொண்டாா்.