கும்மிடிப்பூண்டியில் மரக்கன்றுகள் நடும் விழா
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில், தீவிர பிளாஸ்டிக் ஒழிப்புப் பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில், தீவிர பிளாஸ்டிக் ஒழிப்புப் பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்யும் நோக்கிலும், பயன்படுத்தப்படாத தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தால் அவற்றைக் கண்டறிந்து பறிமுதல் செய்யும் நோக்கிலும் தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்வு நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் நரேந்திரன், பதிவறை எழுத்தர் கருணாநதி, சுகாதார மேற்பார்வையாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூக ஆர்வலர்கள் கும்மிடிப்பூண்டி காந்தி உலக மைய நிர்வாகி எம்.எல்.ராஜேஷ், பெப்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த சுரேஷ்பாபு ஆகியோர், பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு பிளாஸ்டிக் ஒழிப்புப் பிரிவினர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி முழுக்க வீடுகளில் சோதனை செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து, பயன்படுத்தப்படாத நிலையில் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும், பேரூராட்சி சார்பில் கும்மிடிப்பூண்டியில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.