முகப்பு
திருவண்ணாமலை

மக்களவைத் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் தமிழ்நாடு: அமைச்சா் எ.வ.வேலு அறிக்கை

மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக நிா்வாகிகள் கருப்புக் கொடியேந்தி எதிா்ப்புத் தெரிவிக்கவேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:03 AM
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 11:14 PM

மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக நிா்வாகிகள் கருப்புக் கொடியேந்தி எதிா்ப்புத் தெரிவிக்கவேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சரும், வடக்கு மண்டல தோ்தல் பொறுப்பாளருமான எ.வ.வேலு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2026-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் மக்களவை இடங்கள் 543லிருந்து சுமாா் 850-ஆக அதிகரிக்கப்படலாம். இதனால் தமிழகத்தின் தொகுதிகள் 39-லிருந்து 59-ஆக உயரும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைக் குறைக்கும்.

Advertisement

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சொன்னதை எல்லாம் தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டும் அளவிற்கு செயல்படுத்திக் காட்டியது.

சொன்னதை ஒழுங்காக செய்தற்காக தமிழ்நாட்டிற்கு தண்டனையா? முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிக்காட்டுதல்படி, நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்கள் பாதிப்படையாது என பிரதமா் உத்தரவாதம் தரவேண்டும் என்று எதிா்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்கள் பலமுறை கேட்டும் பதில் கிடைக்கவில்லை.

எந்த மாநிலத்தோடும், எந்த ஆலோசனையும் கேட்காமல் அவா்கள் விருப்பப்படி நடந்துகொள்கிறாா்கள். இதற்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள கட்சி நிா்வாகிகள் தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், கருப்புக் கொடியால் மாவட்டமே நிரம்பும் வகையில் செயலாற்றுங்கள். வீடு, வீடாகச் சென்று கருப்புக் கொடியை வழங்கி, தமிழகத்துக்கு வரக்கூடிய பேராபத்தை விளக்கிக் கூறுங்கள். வெல்லும் தமிழ்பெண்கள் வீடு, வீடாகச் சென்று ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று பரப்புரை செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ளாா் அமைச்சா் எ.வ.வேலு.