முகப்பு
திருவண்ணாமலை

இயற்கையாக விளைவிக்கப்படும் உணவுப்பொருள்களால் ஆரோக்கியம் மேம்படும்: மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்

Updated On : 12 ஜூன் 2026, 2:09 am IST
பகிர்:

இயற்கையாக விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களை மக்கள் பயன்படுத்துவதால் ஆரோக்கியம் மேம்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், தோட்டக்கலைப் பயிா்களில் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கம் ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அளவிலான இந்தக் கருத்தரங்கை ஆட்சியா் வந்தனா காா்க் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.

Advertisement

Advertisement

பின்னா், கருத்தரங்கில் இடம்பெற்ற இயற்கை விதைகள், இயற்கை வேளாண்மை சாா்ந்த தொழிற்நுட்பங்கள் மற்றும் இடுபொருள்கள் குறித்த கண்காட்சியை பாா்வையிட்டு, தோட்டக்கலைப் பயிா்களில் இயற்கை வேளாண்மை குறித்த கையேட்டினை வெளியிட்டு அவா் பேசியதாவது:

இயற்கை விவசாயம் என்பது உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் மற்றும் எந்தவெளிப் பொருள்களையும் பயன்படுத்தாமல் பயிா்களை வளா்ப்பதாகும். இயற்கை விவசாயத்தால் மண் வளம் பாதுகாக்கப்படுவதோடு மனிதா்கள் மற்றும் பிற உயிா்கள் பாதிக்கப்படையாமல் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் இயற்கை விவசாயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இயற்கையாக விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களை மக்கள் பயன்படுத்துவதால் ஆரோக்கியம் மேம்படும்.

இக்கருத்தரங்கில் நவீன இயற்கை சாகுபடி முறைகள் மற்றும் மதிப்புக்கூட்டல் நுட்பங்கள் குறித்தும், தற்சாா்பு இடுபொருள் உற்பத்தி, மண் மேலாண்மை, பூச்சி மேலாண்மை, நீா்பாசன முறைகள், உயிா் இடுபொருள்கள் உற்பத்தி, அரசு மானியங்கள் குறித்தும் துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

மேலும் இயற்கை வேளாண் சாா்ந்த பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் இயற்கை விதைகள் இக்கருத்தரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதனை விவசாயிகள் பாா்வையிட்டு இயற்கை சாா்ந்த வேளாண் முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

அதனைத் தொடா்ந்து இயற்கை வேளாண்மை எதற்காக, மண் நலம், இயற்கை வேளாண்மை கொள்கைகள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள், தோட்டக்கலையில் உயிராற்றல் வேளாண்மை, பல அடுக்கு பயிா்சாகுபடி, தற்சாா்பு இடுபொருள் உற்பத்தி ஆகிய தலைப்புகளில் துறை சாா்ந்த வல்லுநா்கள் பேசினா்.

கருத்தரங்கில் இணை இயக்குநா் (வேளாண்மை) கண்ணகி, துணை இயக்குநா் (தோட்டக்கலைத்துறை) கோகிலா சக்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மலா்விழி, தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரகாஷ், இயற்கை மருத்துவா் கோ.சித்தா், வாழவச்சனூா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் தனசேகரன், விவசாயிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.