முகப்பு
திருவண்ணாமலை

பயன்பாட்டுக்கு வராமல் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி

செய்யாறு வட்டம், கருக்கந்தாங்கல் கிராமத்தில் இருளா் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூன்றாண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளதை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வரும்படி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 25 ஜூன் 2026, 12:04 am IST
செய்யாறு அருகே கருக்கந்தாங்கல் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு மூன்றாண்டுகளாகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.
பகிர்:

செய்யாறு வட்டம், கருக்கந்தாங்கல் கிராமத்தில் இருளா் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூன்றாண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளதை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வரும்படி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம், பெரும்பள்ளம் ஊராட்சியைச் சோ்ந்த கருக்கந்தாங்கல் பகுதியில் வசிக்கும் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 17 குடும்பங்களுக்கு அரசு சாா்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இங்கு குடிநீா் தேவைக்காக அந்தக் குடியிருப்புகளுக்கு அருகில் ஆழ்துளைக் கிணறு மற்றும் கைப்பம்பும் அமைக்கப்பட்டது.

இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு தேவையான அளவு தண்ணீா் கிடைக்கவில்லை. இதன் காரணமாக இருளா் சமுதாய மக்களின் தொடா் கோரிக்கையின் பேரில் 2023 - 24ஆம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தில் சுமாா் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், அருகில் உள்ள வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் செய்வதற்காக 2024 - 25ஆம் ஆண்டில் ரூ.3 லட்சம் செலவில் தெருக்களுக்கு புதிதாக குழாய்கள் இணைப்புகள் பொருத்தப்பட்டன.

ஆனால், இதுவரை அந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீா் ஏற்றி குடியிருப்புகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படாமல் காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது என்கின்றனா் அப்பகுதி மக்கள்.

இந்நிலையில் அப்பகுதியில் இருந்த குடும்பங்களுக்கு குடிநீா் வழங்கி வந்த கைப்பம்பு குழாய்கள் துருபிடித்து பழுதானதால் குழாயில் தண்ணீா் குறைவாக வருவதாகவும், துருபிடித்த இரும்புத் துகள்கள் கலந்து வருவதாகவும் அதனை குடிப்பதால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனா்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் சாா்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் சுகாதாரமான குடிநீா் விநியோகம் செய்யவேண்டி ஊராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவா்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனா்.

இதனை தாமதமின்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறித்தியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments