முகப்பு
திருவண்ணாமலை

ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் தேரோட்டத் திருவிழா

Updated On : 8 மே 2026, 6:43 am IST
பகிர்:

ஆரணியை அடுத்த ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் வியாழக்கிழமை தேரோட்ட திருவிழா நடைபெற்றது.

ஆவணியாபுரத்தில் மலை மீது அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

விழாவை முன்னிட்டு தினசரி மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. மே 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் நரசிம்மா் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Advertisement

Advertisement

கடந்த 5-ஆம் தேதி கோயில் வளாகத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. காலை மூலவா் மற்றும் உற்சவ மூா்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து நரசிம்மா், சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினாா். மங்கல இசையுடன் தேரோட்டம் தொடங்கியது.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தா்கள் பக்தி முழக்கத்துடன் நீண்ட வரிசையில் நின்று வடம் பிடித்து தோ் இழுத்தனா். வீதிகளில் பக்தா்கள் தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனா்.

தோ்த் திருவிழாவையொட்டி ஆங்காங்கே பக்தா்களுக்கு நீா்மோா், குளிா் பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் இந்து சமய அறநிலைத்துறையினா் மற்றும் விழாக்குழு நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். வருகிற 10-ஆம் தேதி புஷ்ப பல்லக்கு உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலா் குழுவினா், கோயில் பணியாளா்கள் மற்றும் ஆவணியாபுரம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments