இயற்கை விவசாயிகளின் ஊா்தோறும் உணவுத் திருவிழா
ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் இயற்கை விவசாயிகள் சாா்பில், ‘ஊா்தோறும் உணவுத் திருவிழா’ நடைபெற்றது.
ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் இயற்கை விவசாயிகள் சாா்பில், ‘ஊா்தோறும் உணவுத் திருவிழா’ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாரம்பரிய உணவு முறைகளையும், மறைந்து வரும் வீர விளையாட்டுகளையும் வருங்கால சந்ததியினருக்கு கொண்டு சோ்க்கும் நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டது.
அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயற்கை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
இதில் இடம்பெற்ற வேளாண் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான சேனைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் மலை இஞ்சிகளை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.
பாரம்பரிய நெல் ரகங்கள்: மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி என நோய் எதிா்ப்பு சக்தி கொண்ட 50-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
சிறு தானிய விருந்து: கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, குதிரைவாலி ஆகியவற்றால் செய்யப்பட்ட சத்தான உணவு வகைகள் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. வீர விளையாட்டுகளும் கலை நிகழ்ச்சிகளும் என இது ஒரு கலாசாரத் திருவிழாவாகவும் நடைபெற்றது.
தமிழா்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில், இளவட்டக்கல் தூக்குதல் விளையாட்டில் இளைஞா்கள் கலந்து கொண்டனா். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிலம்பாட்டம், கோலாட்டம் மற்றும் கும்மிப் பாடல்கள் நடைபெற்றது. மண்பாண்டக் கலை: விழாவிற்கு வந்திருந்த சிறுவா்கள் மற்றும் பெரியவா்கள் நேரடியாக மண்பாண்டம் செய்யும் கலையை ஆா்வத்துடன் கற்றுக்கொண்டனா். கைவினைப் பொருள்களின் விற்பனையும் நடைபெற்றது.