கோயில் கட்டத் தோண்டிய இடத்தில் சிவலிங்கம் கண்டெடுப்பு
வேலூர் அருகே மூஞ்சூர்பட்டு ஏரிக்கரையில் அம்மன் கோயில் கட்டத் தோண்டப்பட்ட இடத்தில் பழங்கால சிவலிங்கம், துர்கையம்மன்
வேலூர் அருகே மூஞ்சூர்பட்டு ஏரிக்கரையில் அம்மன் கோயில் கட்டத் தோண்டப்பட்ட இடத்தில் பழங்கால சிவலிங்கம், துர்கையம்மன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த சிலைகளைக் கொண்டு கோயில் எழுப்பத் திட்டமிட்டுள்ள கிராம மக்கள், சிலைகளை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்திலிருந்து சாத்துமதுரை, பங்களத்தான் செல்லும் பாதையில் மூஞ்சூர்பட்டு ஏரிக்கரை அருகிலுள்ள காலி இடத்தில் அம்மன் கோயில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்தனர். அந்த இடத்தில் ஏற்கெனவே விநாயகர் கோயில் இருந்ததாக அரசு ஆவணங்களில் குறிப்புகள் உள்ளன. இதையடுத்து, அங்கு அம்மன் கோயில் கட்ட அந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, அந்த இடத்தில் ஆவுடையாருடன் சிவலிங்கமும், கல்லில் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்ட துர்கை அம்மன் சிலையும், பலி பீடமும் அடுத்தடுத்து கிடைத்தன.
இதனால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தகவலறிந்த வட்டாட்சியர் பாலாஜி, வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் உள்ளிட்டோர் மூஞ்சூர்பட்டு கிராமத்துக்குச் சென்று, கண்டெடுக்கப்பட்ட சிலைகளை ஆய்வு செய்தனர். அப்போது, அந்தச் சிலைகள் 400 முதல் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்பது தெரியவந்தது. மேலும், துர்கை சிலை சிதலமடைந்தும், சிவலிங்கம், பலிபீடம் ஆகியவை லேசாக உடைந்தும் காணப்பட்டன. இந்தச் சிலைகளை அருங்காட்சியகத்துக்குக் கொண்டு சென்று பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காப்பாட்சியர் சரவணன் தெரிவித்தார். இந்நிலையில், அந்த இடத்தில் மேலும் சிலைகள் இருக்கலாம் என்ற அடிப்படையில் 2-ஆவது நாளாக திங்கள்கிழமை பள்ளம் தோண்டும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
அதேசமயம், கண்டெடுக்கப்பட்ட சிலைகள் குறித்து வட்டாட்சியர், அருங்காட்சியக காப்பாட்சியர் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். புதைபொருள் மீட்பு சட்டத்தின் கீழ் அவற்றை அருங்காட்சியகத்தில் சேர்க்க உத்தரவிடக்கோரியும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அந்த சிலைகளை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும், அந்த சிலைகளைக் கொண்டு கோயில் கட்டி வழிபாடு நடத்த உள்ளதாகவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, வட்டாட்சியர் பாலாஜி கூறியதாவது: புதைபொருள் மீட்பு சட்டத்தின்கீழ் கிடைக்கப் பெற்ற சிலைகளை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதேசமயம், கிராம மக்கள் அந்த சிலைகளை தங்களிடமே வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஆட்சியர்தான் முடிவு எடுக்க முடியும். அதேசமயம், கிடைக்கப்பெற்ற இரு சிலைகளும் சற்று சிதிலமடைந்துள்ளதால் அவற்றை வைத்து வழிபாடு நடத்தக் கூடாது. எனவே, ஆட்சியரின் உத்தரவின்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.