முகப்பு
வேலூர்

கோடையில் வனப் பகுதிகளில் காட்டுத் தீ: தடுப்பு நடவடிக்கைகளை வனத்துறை எடுக்குமா?

வாடிக்கையாக கோடைக் காலங்களில் கடும் வெயில் நேரங்களில் வனப் பகுதிகளில் தீப்பிடித்து எரிவது வழக்கமான ஒன்றாகிவிட்ட நிலையில், அதைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர்

Updated On : 26 பிப்ரவரி 2019, 2:34 am IST
பகிர்:


வாடிக்கையாக கோடைக் காலங்களில் கடும் வெயில் நேரங்களில் வனப் பகுதிகளில் தீப்பிடித்து எரிவது வழக்கமான ஒன்றாகிவிட்ட நிலையில், அதைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் சுமார் 5 ஆயிரத்து 922 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில் வனப்பகுதி 1,743 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.  மாவட்டத்தில் வனப்பகுதி வேலூர் மற்றும் திருப்பத்தூர் வனக்கோட்டங்களாக பிரிந்துள்ளன. வேலூர் வனக்கோட்டத்தில் 1 லட்சத்து  272.220 ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி உள்ளது. இதில் 99,736.415 ஹெக்டேர் பரப்பளவில் காப்புக் காடுகள் உள்ளன. 535.805 ஹெக்டேர் பரப்பளவில் நிலப்பரப்பு உள்ளது. அதேபோல் திருப்பத்தூர் வனக்கோட்டத்தில் 75,052.520 ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதியும், அதில் 71,126.605 ஹெக்டேர் பரப்பளவில் காப்புக் காடுகளும், 3,925.915 ஹெக்டேர் பரப்பளவில் நிலப்பரப்பும் அமைந்துள்ளது.
வேலூர் வனக்கோட்டத்தில் வேலூர், ஆற்காடு, குடியாத்தம், பேர்ணாம்பட்டு, ஒடுக்கத்தூர், அமிர்தி ஆகிய வனச் சரகங்களும், திருப்பத்தூர் வனக்கோட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், சிங்காரப்பேட்டை, ஆலங்காயம் ஆகிய வனச்சரகங்களும் அமைந்துள்ளன.  திருப்பத்தூர் வனச்சரகத்தில் உள்ள சந்தனமரக் கிடங்கு நாட்டிலேயே புகழ்பெற்றதாகும். அமிர்தி வன விலங்கு சரணாலயம் வேலூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
சமூக விரோதிகளால் பாதிப்பு: மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கும் முன்பே வனப்பகுதிகள் தீப்பிடித்து எரிவது வழக்கமாக உள்ளது. இதனால் கோடை முழுவதும் வனவளம் பாழ்படுவதோடு, வனவிலங்குகளும் பெருமளவில் அழிந்து வருகின்றன. சில நேரங்களில் சமூக விரோதிகளும் இந்த காட்டுத் தீ பரவுவதற்கு காரணமாக உள்ளனர். விறகு கரிக்காக அவர்கள் காடுகளில் தீயை ஏற்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக வேலூர் சத்துவாச்சாரி மலைகள் ஆண்டுதோறும் கோடையில் எரிந்து நாசமாவது வழக்கம். காட்டு தீயினால் ஏற்படும் புகையும், சாம்பலும் அருகில் உள்ள கிராமங்களில் படர்ந்து சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.
வனத்துறை மீது குற்றச்சாட்டு: வனப்பகுதியில் ஏற்படும் காட்டுத் தீயை பெரும்பாலும் வனத்துறையினர் அணைப்பதற்கான முயற்சிகளை எப்போதுமே மேற்கொள்வதில்லை. சமூக விரோதிகள் மலைப் பகுதிகளில் சென்று தீ வைப்பதையும் தடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது.
இருப்பினும் காட்டுத் தீயை அணைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும், தண்ணீர் தட்டுப்பாடு, மலைப் பகுதியில் இரவெல்லாம் எரியும் தீயைக் கட்டுப்படுத்த போதுமான தற்காப்பு உபகரணங்கள் இல்லாமை, தீயணைப்பு வாகனங்களை மலைப் பகுதிகளுக்கு கொண்டுச் செல்ல முடியாமை போன்றவற்றை பல்வேறு காரணங்கள் வனத்துறையினரால் எடுத்து வைக்கப்படுகின்றன.
பச்சை இலை, தழைகளைக் கொண்டு வனத்துறை பணியாளர்கள் காற்றில் பரவும் தீயை அணைப்பதும், சுற்றுப் பகுதிகளில் குறிப்பிட்ட இடைவெளிக்கு செடி, கொடிகளை அகற்றி அந்த இடத்தை விட்டு தீ பரவாமல் தடுப்பதும் நடைமுறையில் உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: காட்டுத் தீ பரவாமல் தடுக்க தீத்தடுப்பு பாதைகள் அமைக்கப்பட வேண்டும். வனப்பகுதியில் குறிப்பிட்ட அகலத்தில், சில கி.மீ. தூரத்துக்கு காய்ந்த முள்புதர்களையும், சருகுகளையும் அகற்றி மண்ணைக் கிளறிவிட்டு பாதைபோல் ஏற்படுத்துவதே இந்த தீத்தடுப்பு பாதையாகும். இதன் மூலம் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்தாலும் மற்றொரு பகுதிக்கு தீ பரவுவதை எளிதில் தடுத்துவிட முடியும். 
இந்த பாதையை அமைக்க ஆண்டுதோறும் அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் அப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பது சந்தேகம்தான். அப்படி பணிகள் நடைபெற்றால் கண்காணித்து உறுதிப்படுத்த எந்த அமைப்பும், நிர்வாகமும் இருப்பதாகத் தெரியவில்லை என்கின்றனர் வன ஆர்வலர்கள்.
சமூக விரோதிகளின் நடமாட்டத்தை மலைப் பகுதிகளில் அவ்வப்போது கண்காணிப்பதோடு, எல்லை மீறிச் செல்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும். அவர்களை எளிதில் ஜாமினில் வெளிவரும் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது நடவடிக்கை எடுப்பது மிகப்பெரிய குறைபாடாக உள்ளது என்றும் வன ஆர்வலர்கள் கூறுகின்றனர். வரும் கோடைக்காலத்திலாவது வேலூர் மாவட்ட மலைப்பகுதிகள் காட்டுத் தீயினால் நாசமாவதைத் தடுக்க வனத்துறை தீவிர முனைப்பு காட்ட வேண்டும் என்பதுதான் மாவட்ட மக்களின் விருப்பமாக உள்ளது.

தீத்தடுப்புப் பாதைகள் அமைக்கப்படுகின்றன
இதுகுறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலர் கவிதா கூறியது: 
கடந்த 3 ஆண்டுகளில் வனப்பகுதியில் அதிக அளவில் நிகழ்ந்த தீ விபத்துகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு அப்பகுதிகளில் தீத்தடுப்பு கோடுகள் (தீத்தடுப்பு பாதைகள்) ஏற்படுத்தப்படுகின்றன. தீ விபத்தைத் தடுப்பது குறித்தும், அதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் கிராம வனக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கால்நடை மேய்ச்சலுக்காகவும், வேறு எந்தக் காரணங்களுக்காகவும் யாரும் காப்புக் காட்டுக்குள்  செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துமீறி சென்றால் அபராதம் விதிக்கப்படும். வனப்பகுதி எல்லையோர கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு  தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.