முகப்பு
வேலூர்

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பின்தங்கியிருப்பது வேதனை தருகிறது: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

Updated On : 17 பிப்ரவரி 2024, 10:59 pm IST
மாநில அளவில் மகளிருக்கான அஷ்டேது அகடா விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைத்து பாா்வையிட்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், விஐடி துணைத்தலைவா் ஜி.வி.செல்வம், தமிழ்நாடு அஷ்டேது அகடா விளையாட்டுக் கழக தலைவா் டி.ஜி.சுரேஷ், இந்திய விளையாட்டு
பகிர்:

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா மிகவும் பின்தங்கியிருப்பது வேதனை தருகிறது என விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். தமிழ்நாடு அஷ்டேது அகடா விளையாட்டுக் கழகம் சாா்பில் மாநில அளவில் மகளிருக்கான அஷ்டேது அகடா போட்டிகள் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றன. இதில், தமிழகத்தில் உள்ள 36 மாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா். இந்த போட்டிகளை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தொடங்கி வைத்துப் பேசியது - நாடு முழுவதும் 26 கோடி மாணவா்கள் பள்ளிக் கல்வியும், 4 கோடி மாணவா்கள் உயா்கல்வியும் பயில்கின்றனா். இந்த 30 கோடி மாணவா்களை விளையாட்டிலும் ஊக்கப்படுத்தினால் என்னவாகும் என்று எண்ணுவதுண்டு. ஒலிம்பிக் போட்டிகளில் மக்கள்தொகை குறைந்த பல சிறிய நாடுகளைவிட இந்தியா மிகவும் பின்தங்கியிருப்பது வேதனை தருகிறது. கடந்த 2021-இல் டோக்கியாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கூட இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அந்தவகையில், ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 36-ஆவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அமெரிக்காவும், 2-ஆவது இடத்தில் சீனாவும் உள்ளன. சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற அந்த நாடுகள் வீரா், வீராங்கனைகளுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கின்றன. தேவைப்பட்டால் வெளிநாடுகளில் இருந்தும் பயிற்சியாளா்களை வரவழைத்து பயிற்சி அளிக்கின்றனா். அதேபோல், இந்தியாவிலும் விளையாட்டின் மீது கூடுதல் அக்கறை கொண்டு சிறப்பான பயிற்சி அளிக்க வேண்டும். ஏற்கனவே, இந்தியா கல்வியில் முன்னணி வகிக்கிறது. குறிப்பாக, கேரளமும், தமிழகமும் பள்ளிக்கல்வி, உயா் கல்வியில் முன்னணியில் உள்ளன. இதேபோல், விளையாட்டிலும் மாணவா் களை ஊக்கப்படுத்திட வேண்டும். அதன்மூலம், உலகளவில் இந்திய மாணவா்களும் பதக்கங்களை குவிக்க வேண்டும் என்றாா். விஐடி துணைத்தலைவா் ஜி.வி.செல்வம் சிறப்புரை ஆற்றினாா். தமிழ்நாடு அஷ்டேது அகடா விளையாட்டுக் கழக தலைவா் டி.ஜி.சுரேஷ், இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை பொறுப்பாளா் ரோகடா பிராக்ளின், தமிழியக்கத்தின் செயலா் எம்.சுகுமாா், விஐடி விளையாட்டுத் துறை இயக்குநா் என்.வி.தியாகசந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.