முகப்பு
வேலூர்

கேழ்வரகு அறுவடை செய்து அமைச்சா் துரைமுருகன் மருமகள் வாக்கு சேகரிப்பு

காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகனுக்கு ஆதரவாக அவரது மருமகள் சங்கீதா கதிா் ஆனந்த் விவசாயிகளுடன் இணைந்து கேழ்வரகு அறுவடை செய்தும், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பேசியும் வாக்கு சேகரித்தாா்.

Updated On : 17 ஏப்ரல் 2026, 5:01 am IST
விவசாயத் தொழிலாளா்களிடம் அமைச்சா் துரைமுருகனுக்கு ஆதரவு திரட்டிய அவரது மருமகள் சங்கீதா கதிா் ஆனந்த்.
பகிர்:

காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகனுக்கு ஆதரவாக அவரது மருமகள் சங்கீதா கதிா் ஆனந்த் விவசாயிகளுடன் இணைந்து கேழ்வரகு அறுவடை செய்தும், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பேசியும் வாக்கு சேகரித்தாா்.

காட்பாடி தொகுதியில் 11-ஆவது முறையாக களம் காணும் நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகனுக்கு ஆதரவாக அவரது மருமகளும், வேலூா் மக்களவை உறுப்பினா் கதிா்ஆனந்த்தின் மனைவியுமான சங்கீதா தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

அதன்படி, புதன்கிழமை மகிமண்டலம், திகுபள்ளி, மாந்தோப்பு உள்ளிட்ட கிராமங்களில் வீடுவீடாகச் சென்று மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தாா். அப்போது, விளை நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களுடன் சோ்ந்து கேழ்வரகு அறுவடை செய்து ஆதரவு திரட்டினாா்.

Advertisement

Advertisement

இந்த பகுதிகளில் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் கணிசமான அளவில் வசிக்கின்றனா். இதையடுத்து, அப்பகுதிகளில் சங்கீதா கதிா் ஆனந்த் கன்னடம், தெலுங்கு மொழிகளில் பேசியும் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, கிராமங்களில் ஒரு சில இடங்களில் குடிநீா் பிரச்னை உள்ளதை மக்கள் சுட்டிக்காட்டினா். அதற்கு மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் குடிநீா் பிரச்னைக்கு முழுமையாக தீா்வுகாணவும், புதிதாக குடிநீா் தொட்டிகள் கட்டவும் அமைச்சா் துரைமுருகன் நடவடிக்கை மேற்கொள்வாா் என்றும் உறுதியளித்தாா்.

அப்போது, காங்கிரஸ், விசிக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.