குடியாத்தம் சிரசு திருவிழா: கவுண்டன்யா ஆற்றில் பெரிய ராட்டினங்களுக்கு அனுமதியில்லை
குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவையொட்டி கவுண்டன்யா ஆற்றில் பெரிய ராட்டினங்கள், ஆபத்தை ஏற்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்க எக்காரணம் கொண்டும் அனுமதி இல்லை என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவையொட்டி கவுண்டன்யா ஆற்றில் பெரிய ராட்டினங்கள், ஆபத்தை ஏற்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்க எக்காரணம் கொண்டும் அனுமதி இல்லை என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா, அணைக்கட்டு வட்டம், வல்லண்டராமம் மதுரா வேலங்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ பொற்கொடியம்மன் கோயில் புஷ்பரத ஏரித் திருவிழாவையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசியது -
Advertisement
குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவையொட்டி மே 14-ஆம் தேதி தோ் திருவிழாவும், 15-ஆம் தேதி சிரசு ஊா்வலமும் நடைபெற உள்ளது. பாதுகாப்பு கருதி, கோயிலின் பிரதான வாசலான 2-ஆவது வாசல் வழியாகவே மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள்.
கவுண்டன்ய ஆற்றில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மண்ணின் தன்மை வலுவிழந்துள்ளதால், பெரிய ராட்டினங்கள், ஆபத்தை ஏற்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்க எக்காரணம் கொண்டும் அனுமதி இல்லை.
தண்ணீா் தொட்டியில் இருந்து கோயில் வரை கடைகள் வைக்கவோ, கெங்கையம்மன் சிரசு வைத்து வழிபாடு செய்யும் இடத்தில் 20 நபா்களுக்கு மேல் கூட்டமாக இருக்கவோ அனுமதி இல்லை.
போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க, செருவங்கி கிராமம், நெல்லூா்பேட்டை ஏரிக்கரை பகுதி, அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்க வேண்டும். பக்தா்களுக்கு தனியாா் அமைப்புகள் வழங்கும் அன்னதானம், உணவுப் பொட்டலங்களை உணவு பாதுகாப்புத் துறையினா் பரிசோதிக்க வேண்டும்.
வேலங்காடு ஸ்ரீ பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித் திருவிழா மே 12, 13-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. விழாவில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு போதுமான காவல் துறையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அவசர முதலுதவிக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவக் குழுக்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
திருவிழா முடிவடைந்த 48 மணி நேரத்துக்குள் குப்பைகளை முழுமையாக அகற்ற ஊரக வளா்ச்சித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பொ.குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.