முகப்பு
சேலம்

பிளாஸ்டிக் பைகளில் சூடான பொருள்களைபொட்டலமிட்டால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்

தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகளில், டீ, காபி போன்ற சூடான

Updated On : 25 டிசம்பர் 2018, 8:27 am IST
பகிர்:

தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகளில், டீ, காபி போன்ற சூடான பொருள்களை பொட்டலமிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் எச்சரித்துள்ளார்.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஹோட்டல்கள், பேக்கரி கடைகள், சிற்றுண்டிகள், சில்லறை விற்பனைக் கடைகள் போன்ற உணவு வணிகர்கள் தமது கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு, மாற்றுப் பொருள்களை பயன்படுத்த வேண்டும்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரம் சட்டம், 2006-இல் உள்ள வழிகாட்டுதல்களிலேயே ஐ.எஸ்.ஐ. முத்திரை பெறாத பிளாஸ்டிக்குகளில் உணவுப் பொருள்களை பொட்டலமிட பயன்படுத்தக் கூடாது என வரையறுக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, ஹோட்டல்கள், பேக்கரி கடைகள், சிற்றுண்டிகளில் டீ, காபி போன்ற சூடான உணவுப் பொருள்களை பொட்டலமிடக் கூடாது. 
அவ்வாறு பொட்டலமிடும் கடையினர் அந்தப் பழக்கத்தினை உடனடியாக மாற்றி பாத்திரங்கள், மற்ற ஏதேனும் கொள்கலன்களில் சூடான பொருள்களை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. அல்லது பிளாஸ்டிக் பூசப்படாத அலுமினியம் ஃபாயில் கவர்களில் சூடான பொருள்களை பொட்டலமிடலாம். இருப்பினும், நுகர்வோர்கள் சூடான உணவுப் பொருள்களை வாங்க பாத்திரங்கள் எடுத்துச் செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சூடான உணவுப் பொருள்களை பிளாஸ்டிக்குகளில் அடைத்து விற்றால் முதல் முறை எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்படும். மறுமுறையும் சூடான பொருள்களை பிளாஸ்டிக்குகளில் அடைத்து விற்பது கண்டறியப்பட்டால் கடையின் இயக்கத்தினை நிறுத்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பிரட் மற்றும் பன் போன்ற பேக்கரி பொருள்களை ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளில் பொட்டலமிடக் கூடாது. அவற்றை உணவு பாதுகாப்புத் துறையின் அனுமதி பெற்ற ஐ.எஸ்.ஐ. முத்திரையுள்ள பாலி புரோப்பிலின் என்ற பேக்கிங் தாளில் பொட்டலமிட வேண்டும். பேக்கரியில் பொட்டலமிடப்படும் அனைத்துப் பொருள்களிலும் லேபிள் விவரங்கள் இருத்தல் அவசியமாகும்.
உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வுக்கு வருகை புரியும் போது விதிமீறல் கண்டறியப்பட்டால், லேபிள் இல்லாத பிரட் மற்றும் பன் போன்ற உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்படுவதோடு, வழக்கும் பதிவு செய்யப்படும் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் எச்சரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments