முகப்பு
சேலம்

மேக்கேதாட்டுவில் அணை கட்டாமல் தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மேக்கேதாட்டுவில் அணை கட்டாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று  பா.ம.க. இளைஞர் அணி தலைவரும்,

Updated On : 25 டிசம்பர் 2018, 8:32 am IST
பகிர்:

மேக்கேதாட்டுவில் அணை கட்டாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று  பா.ம.க. இளைஞர் அணி தலைவரும்,  தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
சேலத்தில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
மேக்கேதாட்டு அணைகட்ட முதல்கட்ட ஆய்வுக்காக, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.  இது தமிழகத்துக்குச் செய்யும் துரோகம். தேர்தல் காரணங்களுக்காக மத்திய அரசு இவ்வாறு நடந்துகொள்கிறது. மேக்கேதாட்டுவில் அணை கட்டாமல் தடுத்து நிறுத்திட வேண்டும்.
அணைகள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு  நிறைவேற்றக் கூடாது. இதற்கு ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரும் எதிர்க்க வேண்டும். இந்தச் சட்டம் நிறைவேற்றினால், முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசே பராமரிக்கும். இந்தச் சட்டம் பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். எனவே இந்த சட்டத்தைச் நிறைவேற்றக் கூடாது.
கஜா புயல் பாதிப்புக்கு மறுசீரமைப்புப் பணி: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நிவாரணத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ரூ.50 ஆயிரம் தர வேண்டும். புயலால் 6 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு மறு சீரமைப்புப் பணி இன்னும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
8 வழிச் சாலைத் திட்டத்துக்குத் தவறான தகவல்: சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டம் தேவையற்றது. இத்திட்டம் தொடர்பாக விவசாயிகளுக்கு பொய்யான தகவலை அளித்து வருகின்றனர்.
மேட்டூர் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதேபோல அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தையும் அமல்படுத்திட வேண்டும். வெறும் அறிவிப்புகளை மட்டும் தமிழக அரசு வெளியிடாமல் திட்டங்களைச் செயல்படுத்திட வேண்டும்.
நிலம் திரும்ப வழங்கக் கோரி போராட்டம்: சேலம் உருக்காலை அமைக்க 1970-72ஆம் ஆண்டுகளில் சுமார் 4,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் 1,500 ஏக்கர் நிலம்தான் பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள நிலத்தை விவசாயிகளுக்கே திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளோம்.
விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் எடுத்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். விவசாயத்தை அழித்து கொண்டு வரும் திட்டங்கள் தேவையில்லை. மத்திய அரசை எதிர்க்க முடியாத அரசாக மாநில அரசு உள்ளது. 
சிலை கடத்தல் பிரிவில் உள்ள ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மீது அவதூறு பரப்புகிறார்கள். கோயில் சிலை, சிற்பம் ஆகியவை நமது பாரம்பரியம். அவை பாதுகாக்கப்பட வேண்டும். எங்கெங்கு  சிலைகள் திருடு போய் உள்ளதோ, அந்த சிலைகளை மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும்.
கணினி பயன்பாட்டை கண்காணிக்க 10 துறைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது தேவையற்றது. வன்கொடுமை சட்டத்தால் பிறர் பாதிக்ககூடாது. அதேபோல சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது. 
மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்தவுடன்,  பாமகவின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றார்.
பேட்டியின்போது, பாமக தலைவர் ஜி.கே.மணி,  துணைப் பொதுச் செயலர் இரா.அருள்,  துணைத் தலைவர்கள் கார்த்தி, சதாசிவம், சக்கரவர்த்தி, குணசேகரன், கண்ணையன்,  மாவட்டச் செயலர்கள் சாம்ராஜ், கதிர்ராசத்தினம், நடராஜ், பசுமை தாயக நிர்வாகி சத்ரிய சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments