வெள்ளாளகுண்டம் கிராமம் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைப்பு: இளைஞர்களுக்கு காவல்துறை, பொதுமக்கள் பாராட்டு
வாழப்பாடி காவல் உட்கோட்டத்தில் முதன்முறையாக வெள்ளாளகுண்டத்தில், பொதுமக்கள் ஒத்துழைப்போடு
வாழப்பாடி காவல் உட்கோட்டத்தில் முதன்முறையாக வெள்ளாளகுண்டத்தில், பொதுமக்கள் ஒத்துழைப்போடு கிராமம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. கிராமத்தின் நலன் கருதி கேமரா பொருத்த முயற்சி மேற்கொண்ட இளைஞர்களுக்கு, அண்மையில் நடைபெற்ற விழாவில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வாழப்பாடி காவல் எல்லைக்குட்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் குற்றச்செயல்களைத் தடுக்கவும், குற்றவாளிகளை எளிதாகக் கண்டறியவும் வசதியாக, பொதுமக்கள் கூடும் பேருந்து நிறுத்தம், கடைவீதி, சந்தை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைப்பது குறித்து, சமூக ஆர்வமுள்ள இளைஞர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்களுடன் காவல்துறையினர் கலந்தாய்வு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையடுத்து, வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நாகராஜன், ராமச்சந்திரன், பிரசன்னகுமார், குமரேசன், கவின்ராஜ், சக்திவேல் மற்றும் ராமன் உள்ளிட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து, வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு, வெள்ளாளகுண்டம் கிராமம் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்க முயற்சி மேற்கொண்டனர்.
காவல்துறை ஆலோசனையின் பேரில், இளைஞர்களின் முயற்சியால் வாழப்பாடி பகுதியில் முதன்முறையாக வெள்ளாளகுண்டம் கிராமத்தில் 11 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
வெள்ளாளகுண்டம் பேருந்து நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், வாழப்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி, காவல் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று, கிராமம் முழுவதும் கேமரா கண்காணிப்பைத் துவக்கி வைத்தனர். கிராமத்தின் நலன் கருதி, கிராமம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த முயற்சி மேற்கொண்ட இளைஞர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
வாழப்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி பேசுகையில், "வாழப்பாடி பகுதியில் முதன்முறையாக வெள்ளாளகுண்டம் கிராமம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால், கிராமத்தில் குற்றச்செயல்களைத் தடுக்கவும், குற்றவாளிகளை எளிதாகவும் கண்டறியவும் வழி கிடைத்துள்ளதால், மக்களின் அமைதியும், நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. மக்கள் ஒத்துழைப்போடு கிராமம் முழுவதும் கேமரா பொருத்த முயற்சி எடுத்த இளைஞர்களுக்கு காவல்துறை சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
இந்த விழாவில், காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம், சமூக ஆர்வலர்கள் உதயம் தங்கவேல், பச்சமுத்து, கந்தசாமி, கிராம காவலர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிறைவாக, வாழப்பாடி காவல் ஆய்வாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.