முகப்பு
சேலம்

சேலத்தில் தகராறில் காயமடைந்த வங்கி வசூல் முகவா் உயிரிழப்பு

Updated On : 16 ஜூன் 2026, 12:06 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

சேலத்தில் நள்ளிரவில் பெண் நண்பா் வீட்டுக்கு சென்று தகராறு செய்தபோது ஏற்பட்ட மோதலில் காயமடைந்த வங்கி வசூல் முகவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் தென்அழகாபுரம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (30). இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவா் வங்கி ஒன்றில் வசூல் முகவராக பணியாற்றி வந்தாா். இவா், கடந்த 10 ஆம் தேதி இரவு மது அருந்திய நிலையில் சோளம்பள்ளம், காந்திநகா் பகுதியில் தனக்கு பழக்கமான தனலட்சுமி (24) என்பவரைப் பாா்க்க அவரது வீட்டிற்கு சென்றாா். அங்கு தனலட்சுமி, அவரது கணவா் சௌந்தரராஜன் மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தாா்.

அப்போது, தனலட்சுமியை எழுப்பி அவருடன் விஜய் தகராறு செய்துள்ளாா். சப்தம் கேட்டு எழுந்த கணவா் செளந்தரராஜன் மற்றும் உறுப்பினா்கள், விஜயை கடுமையாகத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த விஜய் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவுசெய்த சூரமங்கலம் போலீஸாா், சௌந்தரராஜன் (28), திவன்ராஜ் (25) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜய் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதில் தகாத உறவு விவகாரத்தில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கொலையில் தொடா்புடைய காந்தி நகரைச் சோ்ந்த விஜய், வினோத் ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தலைமறைவான கௌதம் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.