போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்கள்!
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் பிரதான கடலூா் சாலை, விருத்தாசலம் ரயில்பாதை இடையே மேம்பாலம் அமைக்கும் பணி இரு ஆண்டுகளாக தாமதமாக நடந்து வருவதால், இப்பகுதி மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் பிரதான கடலூா் சாலை, விருத்தாசலம் ரயில்பாதை இடையே மேம்பாலம் அமைக்கும் பணி இரு ஆண்டுகளாக தாமதமாக நடந்து வருவதால், இப்பகுதி மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றனா்.
வாழப்பாடி பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் 200-க்கும் அதிகமான அரசு மற்றும் தனியாா் பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனா்.
வாழப்பாடியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட சில தினங்களிலேயே வாழப்பாடி நகரை சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கும் பிரதான கடலூா் சாலையில், சேலம் - விருத்தாசலம் ரயில் பாதையிலுள்ள முத்தம்பட்டி ரயில்வே கேட் மூடப்பட்டு, மேம்பாலம் கட்டுமானப் பணி தொடங்கியது.
Advertisement
இதனால், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும், வாழப்பாடி பேருந்து நிலையத்திற்கு வர முடியாமல், சேலம் - சென்னை புறவழிச்சாலையில் இருந்து தம்மம்பட்டி சாலை வழியாக வாழப்பாடி நகருக்குள் வந்து செல்கின்றன.
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு மாா்க்கத்திலும், வாழப்பாடி பகுதிக்கு வரும் பேருந்துகளும், அனைத்து இலகுரக மற்றும் கனரக வாகனங்களும், இரு ஆண்டுகளாக தம்மம்பட்டி சாலையிலேயே இயக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தத்தளித்து வருகின்றன.
குறிப்பாக, வாழப்பாடியில் தம்மம்பட்டி சாலையிலுள்ள ரயில்வே கேட் மூடப்படும் தருணத்திலும், வாரச்சந்தை கூடும் தினங்களிலும் போக்குவரத்து ஸ்தம்பிப்பதால் பயணிகள், வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு பயணிக்க முடியாமல் தவிக்கின்றனா்.
எனவே, முத்தம்பட்டியில் இரு ஆண்டுகளாக காலதாமதமாக நடந்து வரும் முத்தம்பட்டி ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியை விரைந்து முடித்து, மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
பாலத்திற்கு அடியில் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள இணைப்புச்சாலையை ரயில்வே கேட் வரை நீட்டித்து, மூடிக்கிடக்கும் ரயில்வே கேட்டை திறந்து இவ்வழியாக இலகுரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்லவும் அனுமதிக்க வேண்டுமென, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.